
நேபாளத்தில் தர்மசாலா-இந்தியா நிதியுதவி
காத்மாண்டு: நேபாளத்தில் கட்டப்படவுள்ள தர்மசாலாவுக்கு இந்தியா ரூ. 150 மில்லியன் நிதியுதவியை அளிக்கிறது.
நேபாளத்திற்கான இந்தியத் தூதர் சிவசங்கர் முகர்ஜி இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நேபாள் பாரத் மைத்ரி பசுபதி தர்மசாலா என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
400 படுக்கைகள் கொண்ட அறைகள், அலுவலகம், வரவேற்பு அலுவலகம், பிரார்த்தனைக் கூடம், சமையலறை, சாப்பாட்டு அறை, மின் வசதி உள்ளிட்டவை இதில் ஏற்படுத்தப்படவுள்ளது.
நேபாளத்தின் பசுபதி பகுதிக்கு வரும் இந்து யாத்ரீகர்களுக்கு இந்த தர்மசாலா பெரும் உதவியாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் இங்கு அறைகள் கிடைக்கும்.
பசுபதி வளர்ச்சி அறக்கட்டளையும், இந்தியத் தூதரகமும் இணைந்து இந்த கட்டுமானப் பணியை மேற்பார்வையிடவுள்ளன.
நிகழ்ச்சியில் முகர்ஜி பேசுகையில், நேபாளத்தின் முக்கிய கலாச்சார மற்றும் மத பாரம்பரியம் மிக்க அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சியில் இந்தியாவும் பங்கெடுப்பது மகிழ்ச்சிகரமானது.
நேபாளத்திற்கும், இந்தியாவுக்கும் இடையிலான பாரம்பரிய உறவை வெளிப்படுத்தும் அடையாளமாக இந்த தர்மசாலா விளங்கும்.
இந்திய, நேபாள பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.