அமைச்சர் தாசரி நாராயண ராவ் மகன் கடத்தல்
திருப்பதி: ஆந்திராவின் மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய இரும்பு மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சரும், பிரபல தமிழ்-தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளருமான தாசரி நாராயண ராவின் மகன் தாசரி பிரபு கடத்தப்பட்டுள்ளார்.
அவரைத் தேடும் பணியில் ஆந்திர போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தாசரி நாராயணன ராவின் மகன் தாசரி பிரபு. இவர் நேற்று தனது மனைவி சுசீலா, மாமியார் சாவித்ரம்மா மற்றும் மகனுடன், சித்தூரில் உள்ள தனது மைத்துனரைப் பார்க்க வந்தார். சித்தூர் வந்த அவர்கள் அங்குள்ள விடுதியில் தங்கினர்.
அப்போது அங்கு 6 பேர் வந்தனர். முக்கியப் பிரச்சினை ஒன்று குறித்து தாசரி பிரபுவிடம் விவாதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து தாசரி பிரபு அறையை விட்டு வெளியே வந்துள்ளார்.
இதையடுத்து அக்கும்பல், தாசரி பிரபுவை வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கிச் சென்றது. பின்னர் வெளியே காத்திருந்த ஒரு காரில் வேகமாக ஏற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர்.
அவரது கூக்குரலைக் கேட்ட குடும்பத்தினர் ஓடி வந்து பிரபுவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் கார் பறந்து விட்டது.
இருப்பினும் விடுதி ஊழியர்கள் வேகமாக செயல்பட்டு ஒரு கடத்தல்காரனை பிடித்து விட்டனர். அவனது பெயர் மஸ்த்ரி மணி. சித்தூரைச் சேர்ந்தவன். அவனை பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரபுவைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும் செல்வந்தரான தாசரிக்கு ஆந்திராவிலும் தமிழகத்திலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.