அமைச்சர்கள் மத்தியில் தயாநிதி: சோனியா-ராகுலுடன் சந்திப்பு; திமுகவில் சலசலப்பு

இது திமுக வட்டாரத்தில் பெரும் எரிச்சலையும் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பிவிட்டுள்ளது.
மேலும் அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டாலும் தயாநிதிக்கு தொடர்ந்து அமைச்சர்கள் அமரும் வரிசையிலேயே இடம் தரப்பட்டுள்ளது.
நேற்று ரயில்வே பட்ஜெட் தாக்கலானபோது அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்குப் பி்ன்னால், வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அகமது மற்றும் அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸுக்கு மத்தியில் ஜம்மென்று அமர்ந்து பட்ஜெட்டை ரசித்துக் கொண்டிருந்தார் தயாநிதி மாறன்.
வழக்கமான குதூகலமும் சிரி்ப்புமாக காணப்பட்ட தயாநிதி, தமிழகத்துக்கான திட்டங்களை லாலு அறிவித்தபோது மேஜையைத் தட்டி லாலுவுக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார்.
அதே போல எதிர்க் கட்சியினரின் கூச்சல் குழப்பத்தால் லாலுவுக்கு பிரச்சனை வந்தபோதெல்லாம் அதை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
கட்டணக் குறைப்பு உள்ளிட்ட விஷயங்களை லாலு அறிவித்தபோது ஆளும் கட்சி எம்பி, அமைச்சர்களுக்கு இணையான மகிழ்ச்சியைத் தெரிவி்த்துக் கொண்டிருந்தார் தயாநிதி.
மேலும் லாலுவின் பேச்சு புரியாமல் தடுமாறிய அமைச்சர் அகமதுக்குவுக்கும் பாயிண்டுகளை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
லாலுவின் நேர் பின்னால் அமைச்சர்கள் வரிசையில் அமர்ந்திருந்தால் இதையெல்லாம் நேற்று லைவ்வாக எல்லா தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
இது திமுக தரப்பில் பெரும் எரிச்சலை மூட்டியுள்ளதாகத் தெரிகிறது. அமைச்சர்களுக்குத் தரப்படும் மரியாதையும் இடமும் தயாநிதிக்கு எப்படி கிடைத்தது என்பது திமுகவின் சந்தேகம்.
இந்த சந்தேகத்தில் இன்னும் கொஞ்சம் பெட்ரோலை ஊற்றும் வகையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவரது மகன் ராகுல் காந்தியையும் தனியே சந்தித்துப் பேசினார் தயாநிதி.
தயாநிதி மீது ராகுலுக்கு தனிப்பட்ட பிரியம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இளைஞர்கள், தீர்க்கமான, மிக முன்னேற்றமான கருத்துக்கள் கொண்டவர்கள். தகவல்-தொழில்நுட்ப விஷயத்தில் இருவருக்கும் ஒரே வேவ்-லென்த் உண்டு.
தகவல் துறை அமைச்சராக இருந்தபோது டெக்னாலஜி விஷயங்களில் தயாநிதிக்கு இருந்த புரிதலும் நிபுணத்துவமும் ராகுலை மிகவும் கவர்ந்ததால் இருவருமே மிக விரைவிலேயே நண்பர்களாகிவிட்டனர்.
இதனால் தான் தயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டபோது, திமுக கடுப்பின் உச்சத்தில் இருந்தபோது கூட தன்னை தனியே சந்தித்துப் பேச தயாநிதிக்கு அப்பாயின்மெண்ட் தந்தார் சோனியா.
சோனியா-ராகுலுடனான நட்பை பேணிக் காத்து வரும் தயாநிதி காங்கிரஸ் சேரப் போகிறார் என்று கூட அவ்வப்போது பேச்சு அடிபட்டு வருகிறது. இந் நிலையில் தான் அதிமுகவில் அவர் சேரப் போவதாக சில நாட்களுக்கு முன் சென்னையில் சில பத்திரிக்கைகள் கதை கட்டிவிட்டன.
அமைச்சர் பதவி பறிக்கப்பட்டாலும் திமுக எம்.பி. பதவியை மட்டும் தயாநிதி இன்னும் ராஜினாமா செய்யவில்லை. ராஜினாமா செய்யுமாறு திமுகவும் கேட்டுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் டிவி-சன் டிவி மோதல் உச்சத்துக்குப் போய் அது எஸ்.சி.வி. ஆபரேட்டர்கள் மீது போலீஸார் பொய் வழக்கு போடும் நிலை போய், தயாநிதியே சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலக படியேறும் சூழல் வந்துள்ள நிலையில் சோனியாவை அவர் சந்தித்துப் பேசியதை திமுக ஜீரணிக்கவில்லை என்கிறார்கள்.
மேலும் நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறனின் பழைய இலாகாவை கையில் வைத்திருக்கும் அமைச்சர் ராசாவுக்கே மாறனுக்கு பின் வரிசை தான் தரப்பட்டிருந்தது. திடீரென்று பார்த்தவர்களுக்கு மீண்டும் தயாநிதி அமைச்சராகி விட்டாரோ என்ற சந்தேகம் கூட தோன்றியிருக்கும்.
விரைவில் திமுக தரப்பில் இருந்து காங்கிரஸை நோக்கி ஏதாவது வகையில் 'ஏவுகணை சோதனை' நடத்தப்படலாம்.