ரஷிய அதிபர் தேர்தல்: டிமிட்ரி மெட்வதேவ் வெற்றி

ரஷ்ய அதிபர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் அதிபர் புடினின் வாரிசான டிமிட்ரி மெட்வதேவ் நிறுத்தப்பட்டிருந்தார். தற்போது மெட்வதேவ், ரஷ்ய துணைப் பிரதமராக உள்ளார்.
இவர் தவிர கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜென்னடி ஜுகனோவ், தேசியா தலைவர் விலாடிமிர் ஜிரினோவ்ஸ்கி, ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆண்ட்ரி பொக்தனோவ் ஆகியோரும் களத்தில் இருந்தனர்.
நான்கு பேர் தேர்தல் களத்தில் இருந்தபோதும், மெட்வதேவ்தான் வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்புகள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. அதன்படி மெட்வதேவ் வெற்றி பெற்றுள்ளார்.
42 வயதாகும் மெட்வதேவ், புடினின் சீடர் ஆவார். அதிபர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்த புடின், தனது சிஷ்யரான மெட்வதேவை அதிபர் பதவியில் அமர்த்த முடிவு செய்தார்.
நேற்று நடந்த தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் மெட்வதேவுக்கு 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. அடுத்த இடத்தில் ஜுகனோவ் உள்ளார். அவருக்கு 17.91 சதவீத வாக்குகள் கிடைத்தன. மொத்த வாக்கு பதிவு சதவீதம் 67.7 சதவீதமாகும்.
தேர்லில் மெட்வதேவ் வெற்றி பெற்றதை புடின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கோலாலமாக கொண்டாடினர். மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கு மத்தியில் புடினும், மெட்வதேவும் மக்களை சந்தித்தனர்.
அப்போது மெட்வதேவ் பேசுகையில், விலாடிமிர் புடினின் கொள்கைகள் தொடரும். அவரது அடியொற்றி நடப்பேன். எனது பதவியை பிரதமர் பதவியேற்கவிருக்கும் புடின் ஆக்கிரமிப்பார் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. இருவரும் அவரவர் வேலைகளைப் பார்ப்போம்.
சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கப்படும். நமது தேசிய நலனைக் கருத்தில் கொண்டும், நாட்டின் வளத்தை கருத்தில் கொண்டும் இந்த வெளியுறவுக் கொள்கைகள் அமையும்.
ரஷ்யர்களுக்கு எதிரான அனைத்து முயற்சிகளையும் உறுதியாக முறியடிப்போம். என்றார் மெட்வதேவ்.
இதற்கிடையே, இந்த தேர்தல் ஒரு நாடகம் என எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அதேபோல பல்வேறு அமைப்புகளும் கூட இந்த தேர்தலை ஒரு கண்துடைப்பு என்று வர்ணித்துள்ளன. ஏராளமான பேர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவை குற்றம் சாட்டியுள்ளன.
ஹில்லாரி வரவேற்பு
இதற்கிடையே, ரஷ்ய அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் தீவிரமாக இருக்கும் ஹில்லாரி கிளிண்டன் வரவேற்றுள்ளார்.