For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம்பியார் வீட்டில் ஜஸ்வந்த் சிங்கை சந்தித்த ஜெயலலிதா!

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் இல்லத்தில் பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா பாஜக தலைவருமான ஜஸ்வந்த் சிங்கை, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். கூட்டணி தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது.

ஜஸ்வந்த் சிங் நேற்று சென்னை வந்தார். அவரை ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு நடிகர் நம்பியாரின் வீட்டில் நடந்தது. நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாரன் நம்பியார் பாஜக முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்பது நினைவிருக்கலாம்.

ஜெயலலிதா, ஜஸ்வந்த் சிங் சந்திப்பின்போது சுகுமாரன் நம்பியாரும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின்போது தனது 60வது பிறந்த நாளையொட்டி ஜஸ்வந்த் சிங்கிடம், ஜெயலலிதா ஆசி பெற்றதாக கூறப்பட்டது.

இருப்பினும் தற்போதைய அரசியல் நிலைமை, பாஜக-அதிமுக கூட்டணி தொடர்பாக இரு தலைவர்களும் முக்கியமாக விவாதித்ததாக தெரிகிறது.

ஏற்கனவே சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்தார். அவருக்கு ஜெயலலிதா மதிய விருந்து அளித்து கெளரவித்தார். அப்போது பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்தும் உடன் இருந்தார்.

இந்த நிலையில் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் சென்னைக்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. சமீப காலமாக பாஜகவும், அதிமுகவும் மேலும் நெருங்கி வந்திருப்பதை இது நிரூபிப்பதாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இருப்பினும் ஜெயலலிதாவின் இந்த சந்திப்பில் பெரும் முக்கியத்துவம் இல்லை என்று அதிமுகதரப்பில் கூறப்படுகிறது. தனது 60வது பிறந்த நாளையொட்டி முக்கியப் பிரமுகர்கள், தலைவர்களை சந்தித்து ஜெயலலிதா ஆசி பெற்று வருகிறார்.

துக்ளக் ஆசிரியர் சோ, பழம்பெறும் தயாரிப்பாளர்கள் பாலாஜி, முக்தா சீனிவாசன், கல்வியாளரும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாருமான திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி, சிறு வயதில் தனக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்த பிரபல பரதநாட்டியக் கலைஞர் சரசா ஆகியோரை ஜெயலலிதா சந்தித்து ஆசி பெற்றுள்ளார் என்பதை அதிமுக தரப்பு சுட்டிக் காட்டுகிறது.

முன்னதாக சென்னை வந்த ஜஸ்வந்த் சிங் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவை நேரம் கிடைத்தால் சந்திப்பேன். இதில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், கர்நாடகத்தில் தாமதம் இல்லாமல் உடனடியாக சட்டசபைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கைச் சீற்றம், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை போன்ற அசாதாரமான நிலை நிலவினால்தான் தேர்தலை தள்ளிப் போட முடியும். ஆனால் கர்நாடகத்தில் அப்படி எந்த நிலையும் இப்போது இல்லை. எனவே விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார் சிங்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X