சிறைகளில் செல்போன் டிடெக்டர் கருவிகளை பொருத்த உத்தரவு
நெல்லை: தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைககளிலும் செல்போன்களைக் கண்டறியும், டிடெக்டர் கருவிகள் விரைவில் பொருத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள புழல்-1,2, வேலூர், சேலம், திருச்சி, கடலூர், மதுரை, பாளையங்கோட்டை, கோவை மத்திய சிறைகளில் 18,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
ஆள் கடத்தல், கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சில கூலிப்படை தலைவர்களும் தாதாக்களும் செல்போன் முலம் வெளியிலுள்ள தங்களது கூட்டாளிகளை தொடர்பு கொண்டு, கொலைகள், ஆள் கடத்தல் போன்ற சட்டவிரோத சம்பவங்களில் தொடர்ந்த ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.
இதையடுத்து அரசு உயர் அதிகாரிகள், சிறைத் துறை அதிகாரிகள், உளவு துறையினர் ஆகியோரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மத்திய சிறைகளில் ரூ.5 கோடி செலவில் ஜாமர் கருவி, ரூ.50 லட்சம் செலவில் ஸ்கேனர் கருவி, ரூ.18 லட்சம் செலவில் செல்போன் டிடெக்டர் கருவிகள் வாங்குவதற்கு ஓப்புதல் பெறப்பட்டது.
முதல் கட்டமாக 2 வாரத்திற்குள் செல்போன் டிடெக்டர் கருவிகள் வாங்கப்பட உள்ளது. கையில் எளிதாக எடுத்து செல்லக்கூடிய இந்த கருவி, சிறைகள், பாத்ரூம் மற்றும் மணலில் புதைக்கப்பட்டுள்ள செல்போன்களை சத்தம் எழுப்பி காட்டி கொடுத்து விடும். விரைவில் இவை சிறைகளில் பொருத்தப்படும்.
இதன் மூலம் சிறைச்சாலைகளில் புழங்கும் செல்போன்களைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்ய வழி ஏற்பட்டுள்ளது.