For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி விசா பெற படாதபாடு பட்ட குஜராத் பெண் ஜெயஸ்ரீ

By Staff
Google Oneindia Tamil News

Jayasree
சென்னை: போலி விசா பெறுவதற்காக மணப்பெண் அலங்காரத்துடன், யாரோ ஒரு நபருடன் கணவன், மனைவி போல போஸ் கொடுத்து பெரும் துயரத்தை சந்தித்துள்ளார், கைதாகி சிறையில் தவிக்கும் விதவைப் பெண்ணான குஜராத்தின் ஜெயஸ்ரீ படேல்.

போலியான ஆவணங்களைக் கொடுத்து விசா பெற்று ஜெயஸ்ரீ என்ற பெண்ணை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக நடிகை புளோரா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனால் திரையுலகம் அதிர்ந்தது.

புளோராவைத் தொடர்ந்து, அடுத்த நாளே போலீஸில் சிக்கினார் ஜெயஸ்ரீ படேல். பி.காம் படித்துள்ள ஜெயஸ்ரீ தனது பெற்றோர் வீட்டில் செல்வச் செழிப்புடன் வளர்ந்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவரது தாய்க்கும், இன்னொரு நபருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட அவர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போய் விட்டார். பின்னர் ஜெயஸ்ரீயின் தந்தையும் ஒரு பெண்ணுடன் போய் விட்டார்.

தனித்து விடப்பட்ட ஜெயஸ்ரீ பாட்டி வீட்டில் தஞ்சம் புகுந்தார். வளர்ந்து பெரிய பெண் ஆனதும், வீட்டில் பார்த்து வைத்தவரை மணந்தார். ஆனால் துரதிர்ஷ்டம் துரத்தியது. ஜெயஸ்ரீயின் கணவர் விபத்தில் இறந்து போனார்.

நிர்க்கதியான நிலையில் தள்ளப்பட்ட ஜெயஸ்ரீ ஹைதராபாத் வந்தார். அங்கு தங்கி சிறு சிறு வேடங்களில் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் வருமானம் போதவில்லை. இந்த நிலையில்தான் ஏஜென்டுகள் சிலர் அவரை அணுகி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தனர்.

அவர்கள் பேச்சை நம்பினார் ஜெயஸ்ரீ. இதையடுத்து ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்த அவர்கள், ஜெயஸ்ரீக்கு மணப்பெண் போன்ற வேடம் போடச் சொன்னார்கள். இதைக் கேட்டு அவர் அதிர்ந்தார்.

ஆனால் இப்படியெல்லாம் செய்துதான் போலி விசாவைப் பெற முடியும் என்று அவர்கள் கூறவே சம்மதித்தார் ஜெயஸ்ரீ. இதையடுத்து ஒரு நபர் மணமகன் கோலத்தில் அடுத்த அறையிலிருந்து வந்தார். அதைப் பார்த்து மேலும் அதிர்ந்தார் ஜெயஸ்ரீ.

கல்யாணம் செய்து கொள்வது போல நடிக்க முடியாது என்று மறுத்துள்ளார். இருப்பினும் அவரை சம்மதிக்க வைத்து திருமணச் சடங்கு நடப்பது போல பல கோணங்களில் படம் பிடித்தனர். ஆனால் தாலி கட்டுவது போல மட்டும் நடிக்க ஜெயஸ்ரீ சம்மதிக்கவில்லை.

இப்படியெல்லாம் செட்டப் செய்து எடுத்த புகைப்படங்கள்தான் ஜெயஸ்ரீயை மாட்டி விட்டு விட்டன. காரணம், தாலி கட்டுவது போல ஒரு படம் கூட இல்லாதது தூதரக அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது.

அதுதொடர்பாக அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் குழம்பிய ஜெயஸ்ரீ தான் குஜராத்தைச் சேர்ந்த பெண் என்பதையும், விதவைப் பெண் என்பதையும் சொல்லி மாட்டிக் கொண்டார்.

அம்பலப்படுத்தும் ஆந்திரா:

இந்த நிலையில் ஆந்திரத் திரையுலகைச் சேர்ந்த மோசடி திரைத்துறையினர் குறித்த விவரங்களை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப் போவதாக அம்மாநில செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி தெரிவித்துள்ளார். இதனால் தெலுங்குத் திரையுலகில் பீதி கிளம்பியுள்ளது.

இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தற்போது விசாரணை நடந்து வருகிறது. தமிழக போலீஸாரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் யார் யாரெல்லாம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படும். தவறு செய்த யாரும் தப்ப முடியாது.

சென்னையிலிருந்து ஒரு போலீஸ் குழு விரைவில் ஹைதராபாத் வரவுள்ளது. இங்குள்ள விசா மையத்தின் செயல்பாடுகளை அது ஆய்வு செய்யவுள்ளது. அந்தக் குழுவுக்கு ஹைதராபாத் போலீஸார் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் மானம் அடங்கியுள்ளது என்பதால் விசாரணையில் எந்தவித சுணக்கமும், மெத்தனமும் கூடாது என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசாரணை முழுமையாக முடிந்த பின்னர் தவறு செய்த 200 பேரின் பெயர், விவரங்களை பகிரங்கமாக வெளியிடுவோம் என்றார் அவர்.

விஐபி தொடர்பு அம்பலம்:

இதற்கிடையே அமெரிக்க விசா மோசடி சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய தமிழக விஐபி குறித்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. அந்த நபர்தான் பெருமளவில் நடிகர், நடிகைகளை அடிக்கடி அமெரிக்கா அழைத்துச் செல்வபர் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர் ஒருவரும், முன்பு ஹீரோவாக இருந்து, பின்னர் வில்லனாகி, சமீப காலமாக தந்தை, தாத்தா வேடங்களில் நடித்து வரும் முன்னணி நடிகர் ஆகியோரின் பெயர்கள் முக்கியமாக இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் முக்கியப் பிரமுகர் ஒருவர் போலீஸ் வலையில் சிக்கியுள்ளார். இவர் அடிக்கடி நடிகர், நடிகைகளை கலை நிகழ்ச்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்குக் கூட்டிச் செல்பவர். இவருக்கும், பல ஏஜென்டுகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது. இவர் மூலமாகவும் பலர் அமெரிக்காவுக்கு முறைகேடாக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து இந்த பிரமுகர் குறித்த அனைத்துத் தகவல்களையும் போலீஸார் சேகரித்து வருகின்றனர். இவர் எங்கும் தப்பி விடாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X