For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலாக் சட்டத்தில் திருத்தம்-எஸ்.எம்.எஸ்., இ மெயில் மூலம் சொல்ல தடை

By Staff
Google Oneindia Tamil News

லக்னோ: அகில இந்திய முஸ்லீம் பெண்கள் தனி நபர் சட்ட வாரியம், புதிய விவாகரத்து வழிமுறைகள் அடங்கிய 'ஷரியத் நிக்கநாமா'வை அறிவித்துள்ளது.

முஸ்லீம் பெண்களின் நலனுக்கென தனியாக, தனி நபர் வாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அகில இந்திய முஸ்லீம் பெண்கள் தனி நபர் சட்ட வாரியம் உருவாக்கப்பட்டது.

தற்போது இந்த வாரியம் விவாகரத்து சட்டத்தில் (ஷரியத் நிக்கநாமா) பல புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. 30 பேர் கொண்ட குழு இந்த திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது. வாரியத்தின் தலைவர் சைஷ்டா அம்பர் லக்னோவில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.

அம்பர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முஸ்லீம் பெண்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முஸ்லீம் திருமணச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றங்களை யாரும் கேள்வி கேட்கவோ, எதிர்க்கவோ முடியாது. காரணம், ஷரியத் சட்டத்திற்கு உட்பட்டும், புனித குரானில் கூறப்பட்டுள்ளவற்றை அடிப்படையாகக் கொண்டும் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் மூலம் முஸ்லீம் பெண்கள் பலர் இதுநாள் வரை பட்டு வந்த துயரங்கள், கொடுமைகள், விவாகரத்து சிக்கல்கள் அறவே நீங்கும். பெண்களுக்கு அதிக உரிமைகள் கிடைக்கும்.

இந்த சட்டத் திருத்தங்களை உருது மற்றும் இந்தியில் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் அனைத்துத் தரப்பினரும் எளிதில் புரிந்து கொண்டு தங்களது உரிமைகளைப் அறிந்து கொள்ள முடியும்.

இந்த சட்டத் திருத்தத்தில் கணவன், மனைவிக்கு உண்டான உரிமைகள், முஸ்லீம் பெண்களுக்கு உண்டான உரிமைகள், திருமண பந்தம் மற்றும் முறிவில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம் பெற்றுள்ளன.

மற்ற நிக்கநாமாக்களை விட இந்த ஷரியத் நிக்கநாமா, மிகவும், எளிதாகவும், உரிமைகள் எளிதில் புரியும்படியும் உள்ளது.

பழைய நிக்கநாமாவில் (இதுதான் தற்போது அமலில் உள்ளது) திருமணப் பதிவு கட்டாயம் இல்லை. பெண்களுக்கான உரிமைகள் இல்லை. திருமணத்தை முறித்துக் கொள்வது மிகவும் எளிதாக இருக்கிறது. அந்த நிக்கநாமா முற்றிலும் பெண்களின் உரிமைகளைப் பறிப்பது போல உள்ளது. மேலும் பழைய நிக்கநாமா, முற்றிலும் உருதில் மட்டுமே உள்ளது. இதனால் அனைவரும் இதனை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது என்றார் அவர்.

புதிய திருமணச் சட்டத் திருத்தத்தின்படி இனிமேல் முஸ்லீம் திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

தலாக் சொல்வதிலும் பல புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ்., இ மெயில், தொலைபேசி ஆகியவற்றின் மூலம் தலாக் சொல்ல முடியாது. அதற்கு புதிய சட்டத் திருத்தத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபத்திலோ அல்லது தூக்கத்திலோ அல்லது போதையிலோ தலாக் சொன்னால் அது செல்லாது.

மனைவியை அவரது கணவனோ அல்லது கணவன் வீட்டோரா கொடுமைப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கணவர் கொடுமையைத் தாங்க முடியாமல் பிரிய மனைவி நினைத்தால் அதற்கு இந்த சட்டத் திருத்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. அதாவது நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஒதுக்கி வைத்தால் அல்லது கட்டாய உறவுக்கு வற்புறுத்துவது ஆகியவை கொடுமையான செயல்களாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட கொடுமைகளைச் செய்யும் கணவர்களிடமிருந்து மனைவியர் விவாகரத்து பெற முடியும்.

மேலும் விவாகரத்துக்கு கணவன் மறுத்தாலும் கூட மனைவி விரும்பினால் விவாகரத்து வழங்கப்படும்.

தனக்குப் பிடிக்காத கணவரிடமிருந்து விலக மனைவி முடிவு செய்தால் முறைப்படி விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். அந்த சமயத்தில் திருமணத்தின்போது வழங்கிய தொகையை கணவர் திரும்பக் கொடுக்க வேண்டும் அல்லது ஜீவனாம்சம் போல ஏதாவது தொகையை தர வேண்டும்.

மேலும் தன்னுடன் ஒரு ஆண்டுக்கும் மேலாக உடல் ரீதியான தொடர்பு வைத்திருக்காத கணவர், எய்ட்ஸ் பாதித்த கணவர், கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் கணவர், உடல் ரீதியாக துன்புறுத்தும் கணவரை விவாகரத்து செய்ய முஸ்லீம் பெண்களுக்கு உரிமை உண்டு என்று புதிய நிக்கநாமா சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

முஸ்லீம் சட்ட வாரியம் நிராகரிப்பு:

ஆனால் இந்த சட்டத் திருத்தம் கேலிக்கூத்தாக உள்ளது என்று கூறி அதை ஏற்க முடியாது என அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் கூறியுள்ளது. இது ஒரு தலைபட்சமான நிக்கநாமா. இதை ஏற்க முடியாது என்று சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினரான மெளலானா காலித் ரஷீத் பிராங்கிமஹலி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஏற்கனவே ஒரு நிக்கநாமா அமலில் உள்ளது. இது குரானை அடிப்படையாகக் கொண்டும், ஷரியத் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் இன்னொரு நிக்கநாமாவை அனுமதிக்கவோ, ஏற்கவோ முடியாது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X