மலேசிய அமைச்சரவையில் 4 தமிழர்கள்

மலேசிய பொதுத் தேர்தலில் பிரதமர் அப்துல்லா அகமது படாவி தலைமையிலான பாரிசன் தேசியக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் பெரும் பலத்துடன் இந்த முறை படாவிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய வகையில் உருவெடுத்துள்ளன.
இந்த நிலையில் படாவி தனது அமைச்சரவையை அறிவித்துள்ளார். கடந்த முறை படாவி அமைச்சரவையில் 32 கேபினட் அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் இப்போது எம்.பிக்கள் பலம் குறைந்து விட்டதால் கேபினட் அமைச்சர்கள் எண்ணிக்கை 27 பேர் கொண்டதாக சுருங்கியுள்ளது.
மொத்தம் 69 அமைச்சர்களை படாவி நியமித்துள்ளார். கடந்த அமைச்சரவையில் இது 90 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையில் பாதிக்கும் மேற்பட்டோர் புதுமுகங்கள் ஆவர். படாவி நிதித்துறையை தனது பொறுப்பில் வைத்துக் கொண்டுள்ளார். அதேசமயம் நாடாளுமன்ற செயலாளர் பதவியை நீக்கி விட்டார். பல பெரும் புள்ளிகள் தேர்தலில் தோற்று விட்டதால் அமைச்சரவையில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 8 பேருக்கு இந்த முறை தேர்தலில் வென்றபோதிலும் கூட இடம் கொடுக்கவில்லை படாவி.
சயத் இப்ராகிம், அமீர்ஷாம் அஜீஸ் ஆகிய இருவரும் அரசியல்வாதிகள் அல்லாத புதிய அமைச்சர்கள். இருவரும் பிரதமர் அலுவலக அமைச்சர்களாக செயல்படுவர். இப்ராகிம் நீதித்துறை பொறுப்பை வகிப்பார். அமீர்ஷாம் பொருளாதார திட்டமிடல் துறையை வகிப்பார். இவர் வங்கி அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
2வது நிதியமைச்சராக நூர் முகம்மது யாக்கூப் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த அமைச்சரவையிலும் இதே பொறுப்பை அவர் வகித்து வந்தார்.
நஜீப் அப்துல் ரஸ்ஸாக் - துணைப் பிரதமர்:
கடந்த அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்த முகம்மது நஜீப் அப்துல் ரஸ்ஸாக் மீண்டும் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பாதுகாப்புத் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் சையத் ஹமீத் அல்பர், உள்துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.சுப்ரமணியம்- கேபினட் அமைச்சர்:
தமிழரான டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
3 தமிழ் துணை அமைச்சர்கள்:
அமைச்சரவையில் 37 பேர் துணை அமைச்சர்கள் ஆவர். இவர்களில் தமிழரான எஸ்.கே.நேசமணியும் ஒருவர். இவருக்கு பிரதமர் அலுவலக அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னொரு தமிழரான எம்.சரவணன், பெடரல் டெரிட்டரி துணை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ஜோசப் குருப் என்பவருக்கு ஊரக மற்றும் பிராந்திய வளர்ச்சித் துறை துணை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பெர்னார்ட் கிலுக் டொம்போக், அகமது ஜாஹித் ஹமிதி, முகம்மது சையத் இப்ராகிம், அமிர்ஷாம் அப்துல் அஜீஸ், முகம்மது நஸ்ரி அப்துல் அஜீஸ் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்தபா முகம்மதுவுக்கு விவசாயத் துறையும், முகம்மது ஷபி அட்பாலுக்கு கலாச்சாரத் துறையும் வழங்கப்பட்டுள்ளது.
ஹிஷாமுதின் டுன் ஹூசைனுக்கு கல்வித்துறையும், ஷாஹிர் அப்துல் சமத்துக்கு உள்நாட்டு வர்த்தகம், வாடிக்கையாளர் விவகாரத் துறை துணை அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை துணை அமைச்சராக ரயாஸ் யாதீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
லியோ டியோங் லாய் சுகாதார அமைச்சராகவும், காலீத் நோர்தீன் உயர் கல்வி அமைச்சராகவும் இருப்பார்.
முன்னாள் அமைச்சரான டத்தோ சாமிவேலு தேர்தலில் தோற்று விட்டதால் முதல் முறையாக அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போய் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.