பாமகவினர் மீது பொய் வழக்கு: அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை
அரியலூர்: தமிழக காவல்துறையினர் பாமகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டு வருவதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு மற்றும் பாமகவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறக் கோரி தமிழகத்தின் வட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். அரியலூரில் நடந்த போராட்டத்திற்கு டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அப்போது மத்திய அமைச்சர் ராஜாவை டிஸ்மிஸ் செய்யக் கோரி டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கோஷமிட்டனர்.
அப்போது அவர் பேசுகையில், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு மற்றும் பாமகவினர் மீது திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதிக்கு தெரிந்தே பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. மத்திய அமைச்சர் ராஜா தூண்டுதல் காரணமாகவே இந்த பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கருணாநிதியிடம் ஏற்கனேவே பலமுறை கூறியும் தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. இந்தப் பொய் வழக்குகள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும். அவ்வாறு வாபஸ் பெறாவிட்டால் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் பாமகவுக்கு 33 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் 13 இடங்களில் திமுகவினர் திட்டமிட்டே பாமக வேட்பாளர்களை தோற்கடித்தனர்.
இதுகுறித்து கருணாநிதியிடம் புகார் செய்தேன். அதன் பின்னரும் திமுகவினர் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கருணாநிதி தோழமை உணர்வு தேவை என்று கூறுகிறார். இதுவா தோழமை உணர்வுக்கு எடுத்துக்காட்டு?
கடந்த 10ம் தேதி பாமகவினர் மீது பொய்வழக்கு போடப்படுவது குறித்து கருணாநிதிக்கு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தில் மத்திய அமைச்சர் ராஜா தூண்டுதல் பேரில் வழக்குகள் போடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தேன்.
அந்தக் கடிதம் எழுதிய பின்னர் ஐஜி மட்டும் மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அதில் கூறியிருந்த பல்வேறு பிரச்சனைகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே முதல்வர் இனியாவது தோழமை உணர்வோடு இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றார் ராமதாஸ்.
அப்பாவிகள் மீது வழக்கா?:
இந் நிலையில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு போன்ற அப்பாவிகள் மீது வழக்கு போடும் திமுக அரசு, தீவிரவாதிகளை ரகசியமாக விடுவித்து வருகிறது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கோபமாக கூறியுள்ளார்.
முன்னாள் பாமக எம்.எல்.ஏ ஜெ. குரு (காடுவெட்டி குரு என்றும் இவருக்குப் பெயர் உண்டு) உள்ளிட்டோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குலை வாபஸ் பெறக் கோரி தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த ஜி.கே.மணி பேசுகையில், அரியலூர் மாவட்ட நிர்வாகிகளான குரு மற்றும் தொண்டர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி இளைஞர் அணி மாநாடு நடந்தது. நான்கு மாதம் கழித்து, மாநாட்டிற்கு நன்கொடை கேட்டு மிரட்டியதாக குரு மீது பொய் வழக்கு போட்டனர்.
யாரிடம் நன்கொடை கேட்டார் என்று சொன்னார்களோ, அவரே நான் புகார் கொடுக்கவில்லை என்றார். அதன் பிறகு எம்.எல்.ஏ., ஒருவரின் உறவினரிடம் புகார் வாங்கி வழக்கு போட்டு, பொங்கல் திருநாளில் சிறையில் அடைத்தனர். இதுதான் பா.ம.க.,விற்கு கிடைத்த பொங்கல் பரிசு.
இப்படி குரு மீது போடும் பொய் வழக்குகள் எல்லாம் கோர்ட்டில் நிரூபிக்க முடியாமல் போலீசார் தினறுகின்றனர். இதற்கெல்லாம் அந்த மாவட்ட டி.ஐ.ஜி.,யும், முக்கிய பிரமுகர் ஒருவரும் தான் காரணம்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளை சிறையில் இருந்து ரகசியமாக விடுதலை செய்து, வெளியில் உலா விட்டு தி.மு.க., அரசும், காவல் துறையும் வேடிக்கை பார்க்கிறது. ஒரு தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பொய் வழக்கு போடுகிறது.
உடனடியாக வழக்கை திரும்பப் பெறவிட்டால் தமிழகம் முழுவதும் தீவிரப் போராட்டம் நடத்துவோம் என்றார் ஜி.கே.மணி.