
சட்டசபை கூடியது- நாளை பட்ஜெட்

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. காலை சபை கூடியதும், மறைந்த முன்னாள் சபாநாயகர் ராஜாராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ தங்கவேல், இவாஞ்சலிஸ்ட் டி.ஜி.எஸ். தினகரன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ராஜாராமுக்கு புகழாரம்:
இரங்கல் தீர்மானத்தை தாக்கல் செய்து சபாநாயகர் ஆவுடையப்பன் பேசுகையில், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் ராஜாராம். பெரியாரின் தீவிர தொண்டர். சட்டசபை சபாநாயகராக 1980ம் ஆண்டு முதல் 85ம் ஆண்டு வரை அவர் சிறப்பாக பணியாற்றினார்.
பெரியாரின் செயலாளராகவும் அவர் ஆரம்ப காலத்தில் பணியாற்றியுள்ளார். அவருடைய கடுமையான உழைப்பால், பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் இதயங்களில் இடம் பிடித்தவர்.
1962ம் ஆண்டு முதல் 67ம் ஆண்டு வரையிலும், பின்னர் 1967ம் ஆண்டு முதல் 71 வரையிலும் லோக்சபா உறுப்பினராக செயலாற்றினார். 1971 முதல் 76 வரையிலும், பின்னர் 1980-84, 1985-88, 1991-96 வரையில் சட்டசபை உறுப்பினராகவும் பணியாற்றினார்.
1978-79ல் டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாகவும் செயலாற்றினார். 1971-76, 1985-88, 1991ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் அக்டோபர் 11ம் தேதி ஆகிய கால கட்டங்களில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
ராஜாராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் சபையை நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்த சபாநாகர், சபை நாளை கூடியதும் 2008-09ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்வார் என்று அறிவித்தார்.
நாளை பட்ஜெட்:
நாளை (வியாழக்கிழமை) காலை நிதியமைச்சர் அன்பழகன் திமுக ஆட்சியின் 3வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.
இந்தக் கூட்டத் தொடரில் பால்விலை உயர்வு, தமிழ்நாடு மின்சார வாரியத்தை இரண்டாக பிரிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த கூட்டத் தொடர் மே மாதம் முதல் வாரம் வரை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டைப் போலவே தமிழக பட்ஜெட்டிலும் பல்வேறு சலுகைகள் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 2 மாதங்களுக்கு நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் 55 மானியக் கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
பகைமையுடன் இருக்கும் தோழமைக் கட்சியான பாமக, சட்டசபைக் கூட்டத் தொடரில் திமுகவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பக் கூடும் என்று தெரிகிறது.
அதேபோல எதிர்க்கட்சியான அதிமுக, இந்த முறை என்ன மாதிரியான 'குண்டுகளை' சட்டசபையில் போடப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
பல்வேறு சூடான பிரச்சினைகள், அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் கூடும் பட்ஜெட் கூட்டத் தொடர் படு சூடாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எம்எல்ஏக்களுடன் ஜெ ஆலோசனை:
சட்டமன்ற கூட்டத் தொடர் துவங்கியுள்ள நிலையில் இன்று காலை
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் எந்தெந்தப் பிரச்சனைகளை கிளப்பது, எம்எல்ஏக்கள் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து என்று அவர் விவாதித்ததாகத் தெரிகிறது.