For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது அண்ணா திமுக அல்ல, அம்மா திமுக-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: அதிமுக என்றால் அண்ணா திமுக அல்ல, அம்மா திமுக தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: திமுக அரசின் நிதிநிலை அறிக்கை அர்த்தமற்ற வார்த்தைகளின் அணிவகுப்பு, வெற்று அறிவிப்புகளின் விளம்பரத் தோரணம், காகிதத் திட்டங்களின் கவர்ச்சி அறிக்கை என்றெல்லாம் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்: பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாடுவோம் என்றும், தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் பொங்கல் நாளை தமிழ்ப் புத்தாண்டு முதல் நாளாகக் கொண்டாடுவோம் என்றும் சொல்லியிருப்பது அவருக்கு அர்த்தமற்ற வார்த்தைகளின் அணி வகுப்பாகத் தோன்றியிருக்கிறது! அதிமுக என்றாலே அண்ணா திமுக அல்ல; அம்மா திமுக தானே?

கேள்வி: அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகளில் முறையாகக் கிடைக்கிறதா என்றும், கருணாநிதியார் இந்தக் கடைகளுக்குச் சென்றதுண்டா என்றும் ஜெயலலிதா கேட்டிருக்கிறாரே?

பதில்: நான் சென்றதில்லை. அம்மையார்தான் மாதந்தோறும் கைப்பையைத் தூக்கிக் கொண்டு நியாய விலைக்கடைகளுக்குச் சென்று இந்தப் பொருட்களை வாங்கி வருகிறார்!

கேள்வி: புதிய மின் உற்பத்தித் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி நிலை அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது என்றும், ஆனால் இன்றைக்கு இருளில் தமிழ்நாடு மூழ்கிக் கிடக்கிறது என்றும் ஜெயலலிதா நொந்து கொண்டிருக்கிறாரே?

பதில்: மின் உற்பத்தித் திட்டங்கள் தொடங்கப்பட்டால், காலையிலே திட்டத்தைத் தொடங்கி விட்டு மாலையிலே மின்சாரம் உற்பத்தியாகி விடாது. கடந்த கால ஜெயலலிதா ஆட்சியிலே முறையாக மின் திட்டங்கள் தீட்டப்பட்டு தொடங்கப்பட்டிருந்தால் இப்போது தமிழகம் இந்த அளவிற்குக் கூட இன்னலுக்கு ஆளாகியிருக்காது. திடீரென்று இப்போது முதலைக் கண்ணீர் வடிப்பதால் எந்தப் பயனுமில்லை.

தற்போது இந்த ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ள மின் திட்டங்களின் பயன்கள் இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் தமிழகத்தின் மின் தேவையை முழு அளவிற்கு நிறைவு செய்யும்.

கேள்வி: தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவோம் என்று நிதி நிலை அறிக்கையிலே சொல்லியிருப்பது நகைப்புக்கு இடமானது என்று ஜெயலலிதா சொல்கிறாரே?

பதில்: இந்த அரசு ஆட்சிக்கு வந்த இரண்டாண்டு காலத்தில் 13 தொழில் நிறுவனங்களுடன் 17,563 கோடி ரூபாய் முதலீட்டுடன், 1,41,640 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை அளிக்கக் கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது போன்ற புள்ளி விவரங்கள் எதுவும் ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி எடுத்து வைக்க முடியாது.

எனவே இப்போது இந்த விவரங்களை எடுத்துச் சொல்லும்போது அவருக்கு நகைப்பாகத்தான் இருக்கும். நகைப்பு அளவுக்கு அதிகமானால் அதற்குப் பெயர் வேறு!

கேள்வி: ஏழைக் குடும்பத்து பிள்ளைகள் பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்தி விடுகிறார்கள் என்றும், அவர்களின் படிப்பைத் தொடர நிதி நிலை அறிக்கையிலே எதுவும் இல்லை என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?

பதில்: கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையின் பக்கம் 18, பத்தி 47யையும், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை பக்கம் 18, பத்தி 38யையும் 48யையும் அவர் படித்துப் பார்த்தால் அவரது கேள்விக்கு விளக்கம் கிடைக்கும். அது வருமாறு:

கடந்த ஆண்டிலேயே நிதி நிலை அறிக்கையிலே, சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வியினைத் தொடர வழி வகுக்கும் முறையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு, அரசு கல்லூரிகளில் உயர்கல்வி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அது தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் அனைவருக்கும் தொடக்கக் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி கிடைக்கச் செய்யும் நோக்கத்தோடு, மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்திற்காக மாநில அரசின் பங்காக இந்த நிதி நிலை அறிக்கையில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றுள்ளது.

மேலும் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையிலே அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12வது வகுப்பு வரை பயிலும் 50 லட்சம் மாணவர்களுக்கு, சிறப்புக் கட்டணம் வரும் ஆண்டு முதல் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வழிக் கல்வி பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் 1,000 மாணவ மாணவியர்களுக்கு ஊக்கப் பரிசாக கணினிகள் வழங்கப்படும் என்பதும் ஏழையெளிய மாணவர்களின் கல்வி இடையிலே நின்று விடக் கூடாது என்பதற்காகத்தான்.

இந்த விவரங்களையெல்லாம் அந்த நிதி நிலை அறிக்கைகளில் உள்ளதைப் படிக்காமல், பொத்தாம் பொதுவில் புழுதி வாரித் தூற்றுவது நல்லதல்ல.

அது மாத்திரமல்ல, இடையிலே படிப்பை நிறுத்துவது பற்றிய பிரச்சினையில் புள்ளி விவரங்களைப் பார்த்தால் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிப்பவர்களில் இடையில் நிறுத்தியவர்கள் 2005ம் கல்வியாண்டில் 3.96 சதவிகிதம், 2006ம் கல்வியாண்டில் 1.9 சதவிகிதம், 2007ம் கல்வி ஆண்டில் 1.4 சதவிகிதம்.

அதாவது ஆயிரம் பேருக்கு 14 பேர் தான் படிப்பைத் தொடராமல் விட்டு விடுபவர்கள். அதைப் போலவே 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை என்று எடுத்துக் கொண்டால், 2005ம் கல்வியாண்டில் 7.58 சதவிகிதம், 2006ம் கல்வியாண்டில் 4.08 சதவிகிதம், 2007ம் கல்வியாண்டில் 2.4 சதவிகிதம்.

கேள்வி: பொதுவாக திமுக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என்றும் மொத்தத்தில் விருப்பும் வெறுப்பும் கலந்துள்ள பட்ஜெட் என்றும் பாமக தலைவர் கோ.க. மணி கூறியுள்ளாரே?

பதில்: விருப்பும் வெறுப்பும் கலக்க முடியாது. அப்படிக் கலந்தால் அது முழுமையும் வெறுப்பாகத்தான் இருக்கும். பாலில் விஷம் என்பது போல -விஷத்தின் அளவு குறைவாக இருந்தாலும்; பால் முழுமையும் கெட்டுப் போய் விடும். அது போல விருப்புடன் வெறுப்பு கலந்தாலும் அதற்குப் பொருள்; முழுமையும் வெறுப்பு என்பதுதான்.

இதிலே வேடிக்கை என்னவென்றால் நண்பர் மணி அவர்கள், அவரது அறிக்கையில் பா.ம.க. வெளியிட்டுள்ள நிழல் நிதி நிலை அறிக்கையில் சொன்ன பெரும்பாலானவற்றை இந்த அரசு நிறைய செய்துள்ளது' என்று கூறியிருக்கிறார்.

இப்போது எனக்குள்ள சந்தேகமெல்லாம்; விருப்பு - வெறுப்பை விழுங்கியுள்ளதா? அல்லது வெறுப்பு - விருப்பை விழுங்கியுள்ளதா என்பதுதான்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நடந்தது. இதன் பின்னர் நிருபர்களிடம் பேசினார் கருணாநிதி. அதன் விவரம்:

கேள்வி: எல்லா தரப்பினருக்கும் சலுகைகளை அளிக்கக் கூடிய வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதே?

பதில்: மிகவும் நன்றி. உண்மையை சொன்னதற்காக நன்றி. ஊக்கம் அளித்தமைக்காக மிகவும் நன்றி.

கேள்வி: மத்திய அரசு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்று பட்ஜெட்டில் சொல்லி இருக்கிறீர்களே?

பதில்: மத்திய அரசு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்று அதில் கூறவில்லை. மாநில அரசு முட்டுக்கட்டைகளை கடந்து, திட்டங்களை தீட்டி முன்னேறகு முயற்சிக்கையில் மத்திய அரசு பாராமுகமாக இராமல் பாதுகாப்பாக இருந்திட வேண்டும் என்று வேண்டுகோள்தான் விடப்பட்டுள்ளது. ஏனென்றால் ஓகேனக்கல் போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்று உரிமை வழங்கப்பட்ட பிறகும் திட்டத்திற்கு எதிர்ப்புகள் வருகிறது அல்லவா?

கேள்வி: பட்ஜெட் தாக்கலானபோது அதிமுக வெளிநடப்பு செய்ததே?

பதில்: இது சிறந்த நிதிநிலை அறிக்கை என்று அவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால் தான் அவர்கள் தொடக்கத்திலேயே வெளிநடப்பு செய்து செய்திருக்கலாம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X