பழனியில் இன்று பங்குனி உத்திர தேரோட்டம்
பழனி: பழனி கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடக்கிறது. கன மழையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப் பெருமானின் 3ம் படை வீடான பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி தினமும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள திருஆவினன்குடி மற்றும் மலைகோவிலில் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதைத் தொடர்ந்து வெள்ளி தேரோட்டம் நடந்தது.
இந் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேராட்டம் இன்று நடக்கிறது. இதையொட்டி பழனி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், ஆறுகால பூஜைகள் நடந்தன.
பின்னர் தீர்த்தவாரி எழுந்தருளலும், தங்கப் பல்லக்கு உலா ஆகியவையும் நடந்தன. மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிகளைக் காணவும் முருகப் பெருமானை தரிசிக்கவும் கன மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.
தீர்த்தக் காவடி எடுத்து வந்துள்ள பக்தர்களும் கொட்டும் மழையில் நீண்ட வரிசையில் நின்று நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
பங்குனி உத்திர விழாவையொட்டி பழனி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.