வீரர்களை ஏலம் விடுவதை விரும்பவில்லை - டிராவிட்
சென்னை: கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடுவதை தான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்.
சென்னை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள டிராவிட், நேற்று வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார். மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் பல்வேறு விளையாட்டுக்களில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 18 லட்சம் மதிப்பிலான ஸ்காலர்ஷிப் உதவிகளையும் அவர் வழங்கினார்.
பின்னர் மாணவர்களிடையே, டிராவிட் பேசுகையில், கபில் தேவ், கவாஸ்கர், விஸ்வநாத் ஆகியோர் இந்தியாவின் மிகப் பெரும் வீரர்கள். எனது ரோல் மாடல்களும் இவர்கள்தான். இவர்களைப் போலவே விளையாட நான் எப்போதும் முயற்சிக்கிறேன்.
இப்போது சச்சின், டோணியை தங்களது ஹீரோக்களாக ரசிகர்கள் நினைப்பது போல அந்தக் காலத்தில் கவாஸ்கரும், கபில் தேவும், விஸ்வநாத்தும்தான் ஹீரோக்கள். இவர்களை நேரில் சந்தித்துப் பேச, பழக வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்.
எனது தந்தை மூலம்தான் எனக்கு கிரிக்கெட் மீது காதல் வந்தது. எனது தந்தை பள்ளி மற்றும் கல்லூரி அளவில் கிரிக்கெட் ஆடியுள்ளார். அவரைப் பார்த்துதான் எனக்கும் கிரிக்கெட் ஆடும் ஆர்வம் வந்தது. எனது தந்தைக்கு கிரிக்கெட்தான் உயிர்.
பெரிய அளவில் அவர் விளையாடவிட்டாலும் கூட என்னை விளையாட வைக்க ஆர்வமாக இருந்தார். பெங்களூரில் நடக்கும் ரஞ்சிப் போட்டிகள், சர்வதேசப் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் செல்வார். எனக்குள் கிரிக்கெட் வேகத்தையும், ஆர்வத்தையும் விதைத்தது எனது பெற்றோர்கள்தான். எனது பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் என்னை அடையாளம் கண்டு ஊக்குவித்தனர்.
வீரர்கள் ஏலத்தை விரும்பவில்லை:
கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடுவதை நான் விரும்பவில்லை. இப்போது நடந்தது போல மறுபடியும் நடக்கக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட விருப்பம்.
ஒரு கேப்டனுக்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சம், அணியினரை சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீரருடனும் நல்லுறவைப் பேணுவது, அவர்களை ஊக்குவிப்பது ஆகியவைதான் என்றார் டிராவிட்.