ஆட்சி மாற்றத்துக்காக புனித போராட்டம்-சரத்குமார்
சென்னை: நடிகர்கள் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள் மு.க. ஸ்டாலின் அடிக்கடி கூறுகிறார். எங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார். அவருக்கு நான் சொல்லிக் கொள்வது, அவரது தந்தையும் சினிமாவில் கதை, வசனம் எழுதியவர் தானே என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார்.
சென்னையி்ல் நடந்த அக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் சரத்குமார் பேசுகையில்,
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கும்போது ஏன் புதிய கட்சி தொடங்குகிறீர்கள் என்று பலர் என்னிடம் கேட்டனர். நான் ஏற்கனவே இருந்த கட்சியில் (திமுகவா அதிமுகவா) மரியாதை இல்லை என்பதால், வெளியே வந்து கட்சி தொடங்கினேன்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து, நடுத்தர குடும்பத்தில் பிறந்து, சினிமாவில் அடிவாங்கும் வில்லன் நடிகராக இருந்து, இன்று சுப்ரீம் ஸ்டாராக வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு தமிழக மக்கள் ஆகிய நீங்கள்தான் காரணம்.
உங்களுக்கு நல்லது செய்ய நினைத்து கட்சி தொடங்கியுள்ளேன். தற்போது தமிழகத்தில் நாகரீகமற்ற, பண்பற்ற அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் காமராஜர் ஆட்சி பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். காமராஜர், தனது ஆட்சியில் 8 அமைச்சர்களை வைத்துக்கொண்டு ஊழலற்ற ஆட்சியைத் தந்தார்.
கல்வி புரட்சி, தொழில் புரட்சி, விவசாய புரட்சிகளை செய்தார். தொலைநோக்கு பார்வையில் 16 அணைகள் கட்டப்பட்டன.
மக்களுக்கு கல்வியை கற்பிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் வாழவேண்டும். இத்தகைய தொலைநோக்கு பார்வையுடன் அரசு செயல்படவேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் உருட்டு கட்டையால் தாக்கி கொள்வதும், சோடா பாட்டிலால் தாக்குவதும் போன அராஜகமான அரசியல் தறிகெட்டுபோய் உள்ளது. ஊழல் மலிந்துவிட்டது.
இரு நடிகர்கள் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள் அடிக்கடி மு.க. ஸ்டாலின் கூறுகிறார். எங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்கிறார். அவருக்கு நான் சொல்லிக் கொள்வது, அவரது தந்தை சினிமாவிற்கு கதை, வசனம் எழுதியவர் தானே.
இனிமேல் எங்களுக்கு கட்சி ஆரம்பிக்க தகுதி என்ன இருக்கிறது என்று கேட்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டாம் என்று சொல்லவில்லை. புதிய விவசாய தொழில்நுட்பங்களை அவர்களுக்கு, படித்தவர்கள் மூலம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
படித்தவர்களும் விவசாயத்தில் இறங்கவேண்டும். சமச்சீர் கல்வி முறையை சீராக அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் வரை புனித போராட்டம் தொடரும்.
எங்களது கட்சிக்கு நீங்கள் நம்பி வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினால், சட்டமன்ற உறுப்பினர்களாகவோ, அமைச்சர்களாகவோ, முதல்வராகவோ 2 முறைக்கு மேல் யாரும் பதவியில் இருக்க மாட்டோம்.
எனது குடும்பத்தில் இருந்து யாரையும் பதவியில் அமர்த்தமாட்டேன் என்றார்.