சட்டசபையில் துரைமுருகன்-அதிமுக மோதல்
சென்னை: தடுப்பணை பிரச்சனை தொடர்பாக இன்று சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுக்கும் அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் சின்னப்பன், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் வைப்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அவர் பேசுகையி்ல், இந்த அணையைக் கட்ட அதிமுக ஆட்சியில் தான் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் முதலில் திட்டமிட்ட இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் உள்ளே தள்ளி இப்போது அணையைக் கட்டிவிட்டனர்.
இதனால் கடல் நீர் தடுப்பணை வரை புகுவதால் கிணற்று நீர் உப்பாக மாறிவிட்டது. முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கட்ட தீர்மானித்த இடத்தில் அந்த அணையை கட்டாதது ஏன் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்,
யாருடைய தீர்க்க தரிசனத் தினாலும் இந்த அணை கட்டப்படவில்லை. சுனாமி பாதித்த பகுதிகளில் புணரமைப்பு செய்யும் திட்டத்தின் கீழ் கடல் நீர் ஊருக்குள் புகுவதை தடுக்கவும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதை தவிர்க்கவும் இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது.
ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் அவர்கள் மேற்பார்வையில் இந்த அணை அமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆட்சி காலத்தில் 24.10.2005 அன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டு 2007ல் தான் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் நாங்கள் 16 மாதத்தில் கட்டி முடிக்க வேண்டிய இந்த அணையை 7 மாதங்களுக்கு முன்பாகவே கட்டி முடித்திருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய சின்னப்பன், அணையை கடல் அருகில் கட்டாமல் 1 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டியது ஏன் என்று கேட்டவாரே ஒரு ஆட்சேபணைக்குரிய வார்த்தையைக் கூறினார்.
இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து அதிமுகவினர் குரல் தந்தனர்.
இதையடுத்து பதில் தந்த துரைமுருகன் அதே வார்த்தையை திருப்பிக் கூறினார். ஆனால், அப்போது மட்டும் இதற்கு அதிமுவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் எதெற்கெடு்த்தாலும் அதிமுக உறுப்பினர்கள் அம்மா அம்மா என்று குறிப்பிடுதையும் துரைமுருகன் விமர்சித்தார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
பதிலுக்கு திமுகவினர் கூச்சலிடவே தலையிட்ட சபாநாயகர் சின்னப்பனும் அமைச்சரும் கூறிய அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
அமைச்சர் துரைமுருகனுக்கும் அதிமுகவினருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.