பாக். பிரதமர் கிலானி ஐஸ்வர்யா ராயின் விசிறி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ல யூசுப் ரஸா கிலானி, நடிகை ஐஸ்வர்யா ராயின் தீவிர விசிறியாம். அதேபோல மெலடி ராணி லதா மங்கேஷ்கரின் பாடல்கள் என்றால் அவருக்கு உயிராம்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிலானி, பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இவர் ஐஸ்வர்யா ராய் மற்றும் லதா மங்கேஷ்கரின் தீவிர ரசிகராம். இதை அவரே கூறியுள்ளார். கடந்த 2001ம் ஆண்டு இவர் நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தார். அப்போது முஷாரப் அரசு கிலானி மீது முறைகேடு வழக்கைப் பதிவு செய்தது.
கைதாகி சிறைக்குச் செல்கிறீர்களா அல்லது பாகிஸ்தான் மக்கள் கட்சியுடனான தொடர்புகளைத் துண்டித்துக் கொள்கிறீர்களா என்று முஷாரப் அரசு பேரம் பேசியது. அதற்கு கிலானி, பாகிஸ்தான் மக்கள் கட்சிதான் எனது முகவரி. அதனுடனான தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதற்குப் பேசாமல் சிறைக்கே போகிறேன் என்று கூறி சிறைக்குச் சென்றார் கிலானி.
"சிறையில் நான் இருந்தபோது, எனது லேப்டாப் மூலம் ஐஸ்வர்யா ராயின் படங்களையும், லதா மங்கேஷ்கரின் பாடல்களையும் கேட்க, பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அன்று முதல் நான் அவர்களின் பரம விசிறியாகி விட்டேன்.
இப்போது நான் ஐஸ்வர்யாவின் மிகத் தீவிர விசிறிகளில் ஒருவர். இதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று பாகிஸ்தான் டிவி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் கிலானி.
கிலானி, சுபி பரம்பரை வழியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பிரதமர் கிலானி, பாலிவுட்டின் தீவிர விசிறியாக இருப்பதால், இனிமேலாவது பாகிஸ்தானில் இந்தியத் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீங்குமா என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தான் மக்களிடையே எழுந்துள்ளது.