For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிட்னி தானம்-போலீஸ் அனுமதி கட்டாயமாகிறது

By Staff
Google Oneindia Tamil News

kidney transplant operation
சென்னை: மோசடியை தவிர்க்க கிட்னி உள்ளிட்ட மாற்று உடல் உறுப்பு அறுவை சிகிச்சைகளுக்கு போலீஸ் முன் அனுமதி பெறவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள ஆபார வளர்ச்சியால் சென்னை போன்ற பெருநகரங்களில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் ஏராளமாக நடைபெறுகின்றன. இதில் கிட்னி (சிறுநீரகம்) மாற்று அறுவை சிகிச்சைகள் அதிக அளவில் நடக்கின்றன.

ஒவ்வொருவருக்கும் இரண்டு கிட்னி உண்டு. இதில் ஒன்று பழுதானால் ஒன்றுடன் உயிர் வாழலாம். இரு கிட்னியும் பழுதானால் அறுவை சிகிச்சை மூலம் வேறொருவரின் கிட்னி பொருத்தினால் தான் உயிர் வாழ முடியும். இரு கிட்னியும் நன்றாக இருப்பவர்கள் ஒன்றை தானமாக கொடுக்கலாம்.

தானம் கொடுப்பவரின் பூரண சம்மதம் பெற்று அதற்கான அனுமதி சான்று பெற வேண்டும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய குறிப்பிட்ட சில மருத்துவ மனைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவ மனைகளில் இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் போன்ற வெளி நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் வந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் சமீப காலமாக மோசடிகள் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பாவி ஏழை தொழிலாளர்களிடம் பண ஆசை காட்டி கிட்னி' தானம் பெற்று ஏமாற்றப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன.
சென்னையில் வறுமையில் வாடும் தொழிலாளர்கள் பலர் இது போல் பணத்துக்கு ஆசைப்பட்டு கிட்னியை இழந்துள்ளனர். லட்சக் கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் கடைசியில் சிறிதளவு பணம் கொடுத்து மிரட்டி அனுப்பி விடுகிறார்கள்.

அவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை. இதனால் கிட்னி தானம் அளித்த தொழிலாளர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து வேலை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள்.

தமிழ்நாட்டில் சென்னை மட்டுமல்லாது மதுரை, சேலம், ஈரோடு, பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் போன்ற ஊர்களிலும் கிட்னி மோசடி நடைபெற்றது. இது தொடர்பான வழக்குகளை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இது மருத்துவம் சார்ந்த குற்றம் என்பதால் இதில் விசாரணை நடத்துவதிலும், நடவடிக்கை எடுப்பதிலும் போலீசாருக்கு சிக்கல்கள் ஏற்பட்டன. இது குறித்து அரசுக்கு போலீசார் அறிக்கை அனுப்பினர்.

இந்த அறிக்கையை பரிசீலித்த தமிழக அரசு உடல் உறுப்பு தான மோசடியை தடுக்க புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்வோரையும், தானம் பெறுவோரையும் மருத்துவத்துறை இயக்குனர் தலைமையிலான மருத்துவக் குழு மட்டுமே இதுவரை விசாரித்து அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கி வந்தது.

அரசின் புதிய உததரவுப்படி இனி போலீசாரின் முன்அனுமதியையும் பெற வேண்டும். போலீசார் இரு தரப்பினர் பற்றி விசாரித்து அவர்கள் பற்றிய தகவலை உறுதி செய்வார்கள். அதன் பிறகே அறுவை சிகிச்சைக்கு மருத்துவத் துறை இயக்குனரகம் ஒப்புதல் வழங்கும்.

மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டும், மாநகரங்களில் போலீஸ் துணை கமிஷனரும் இதற்கான விசாரணை அதிகாரியை நியமிப்பார்கள். அவர்கள் விசாரித்து அறிக்கை அளித்தபின்னரே அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிட்னி' மோசடி குற்றங்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X