கண்ணீர் விட்டுக் கேட்கிறேன்- பொறுமைக்கும் எல்லை உண்டு-கருணாநிதி

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை வருகிற 9ம் தேதிக்குள் ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்திலிருந்து ஒரு பஸ்சையும் கர்நாடகத்திற்குள் விட மாட்டோம். தமிழ் சானல்களை ஒளிபரப்ப விட மாட்டோம். தமிழ்ப் படங்களை திரையிட விட மாட்டோம் என கன்னட ரக்சன வேதிகே என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் எச்சரிக்கையை நேற்று முதல்வர் கருணாநிதி நிராகரித்தார். சென்னை தி.நகர். வடக்கு உஸ்மான் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்டு பாலத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சாலை என்று இரண்டு பெயர்களை இந்தப் பாலம் கொண்டுள்ளது. இது இரண்டு சாலைகளை மட்டும் இணைக்கும் பாலம் அல்ல, இரு சமயங்களை இணைக்கும் பாலம். இந்த இணைப்புதான் நாட்டில் வர வேண்டும் என்று முற்போக்கு எண்ணம் கொண்ட அனைத்துக் கட்சிகளும் விரும்புகின்றன.
அந்த சமயங்கள் பாலங்களால் இணைக்கப்பட வேண்டும் என்று பெரியவர்கள், இளைஞர்கள் விரும்புகின்றனர். அந்தப் பாலங்கள்தான் மேம்பாலம் எனப்படும். அதுபோன்ற பாலங்கள் அமையாவிட்டால் அது மேம்பாலங்கள் அல்ல. மேம்பாலம் என்பது மேன்மையான பாலம். மேம்படுதல் என்றால் மேன்மை அடைதல் என்று பொருள்.
ஒன்றுபட முடியாத இரு சக்திகளை ஒன்றுபடுத்தி பாலமாக அமைந்தால் அதுதான் மேம்பாலம். அந்த மேம்பாலம் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய நாடு முழுவதும் அமைந்திட வேண்டும் என்று விரும்புகிறேன். எண்ணைப் போல நீங்களும் அந்த விருப்பத்தைப் பெற வேண்டும்.
இங்கே இந்தப் பாலம் கட்டிய நிலையைப் பார்க்கிறேன். இதை கர்நாடக அனுமதிக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. சென்னையில் கட்டுகிற பாலத்தை கட்டாதே என்று சொல்லுகிற அந்தக் குணத்தை கர்நாடகா பெற்றிருக்கும் என்றே கருதுகிறேன். கர்நாடகத்தில் இருக்கிற ஒரு பிரகஸ்பதி ஒரு கட்சித்தலைவர், பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர், அவர் தேர்தலில் நிற்க வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்பதற்காக ஓகனேக்கல் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது, ஓகனேக்கல் எங்களுக்குச் சொந்தம் என்கிறார்.
கேள்விக்குறியான இறையாண்மை:
அதற்கு துரைமுருகனை விட்டு என்னால் பதில் சொல்ல முடியும். ஆனால் நானே பதில் சொல்லுகிறேன் என்றால், தமிழ்நாட்டு மக்களின் சார்பாக மட்டுமல்ல, 6 கோடி மக்களின் சார்பாக மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குறியாகியிருக்கிறதே, இப்படி ஆகலாமா என்று கேட்போரின் சார்பாக நான் இந்தக் கேள்வியை, கர்நாடக மாநிலத்தில் உள்ளவர்களை அல்ல, இந்தியாவை வழி நடத்துகிற மத்திய அரசுக்கு கேட்க விரும்புகிறேன்.
கடந்த 4,5 நாட்களாக தமிழகத்தின் தலைவர்கள், கட்சியின் தலைவர்கள், கர்நாகத்தினுடைய இந்தய கூத்தை, வேடிக்கையை எதிர்த்து அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள், போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அணிவகுத்து செல்கிறார்கள். அவர்ளை எல்லாம் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். அவர்களது தமிழ் உணர்வைப் போற்றுகிறேன், புகழ்கிறேன்.
எதற்கெடுத்தாலும் இடைஞ்சலா?:
அதே நேரத்தில் கர்நாடகத்தில் இருப்பவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். எதை தமிழகம் உரிமையோடு செய்ய நீங்கள் வழி விட்டீர்கள். காவிரியில் இடைஞ்சல். ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டு கர்நாடகத்தின் ஒப்புதலைப் பெற்று மத்திய அரசும் சம்மதம் கொடுத்து நிறைவேற்றப்படுகின்ற திட்டம்தான் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
எங்களுக்குக் குடகில் இருந்து வருகிற நீர்தான் இல்லை என்றால், குடிநீருக்காகப் பயன்படும் ஓகனேக்கல் தண்ணீரும் கிடையாது என்று சொன்னால் என்னாவது?
தமிழ்நாட்டு பஸ்களை உடைப்போம், உள்ளே விட மாட்டோம் என்று அங்கே சொல்லியிருக்கிறார்கள். நான் சொல்கிறேன், பஸ்களை மாத்திரம் அல்ல, எங்களது எலும்புகளையும் உடைத்தால் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம். நிச்சயமாக ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.
நீங்கள் வாழலாம்-இந்திய ஒற்றுமை வாழாது:
கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அல்லாத, அதிமுக அல்லாத, கம்யூனிஸ்டுகள் அல்லாத, மற்ற கட்சிகளைக் கேட்கிறேன் - அந்தக் கட்சிகளை எல்லாம், தேர்தலில் நிற்கிற பாரதீய ஜனதாக் கட்சியாக இருந்தாலும், அல்லது அதற்கு ஆதரவாக செயல்படும் கட்சிகள் எல்லாம் சிந்தித்துப் பார்க்கட்டும். இதை வைத்து தேர்தல் நடத்துவது என்றால், ஒரு தேசத்திலே ஒரு பகுதியை அழித்து விட்டு, மக்களைப் பட்டினி போட்டி விட்டு அவர்களை தண்ணீர் அற்றவர்களாக ஆக்கி விட்டு அவர்களை தாகத்தால் தவிக்க விட்டு, அவர்களது திட்டங்களை எல்லாம் சீர்குலைத்து விட்டு, நீங்கள் வாழ முடியும் என்று கருதினால், நீங்கள் வாழலாம். ஆனால் இந்தியாவினுடைய ஒற்றுமை, பலம், இறையாண்மை வாழாது. அதற்கு வழி வகுக்காதீர்கள்.
கர்நாடகத்தில் உள்ள அவசரக்காரர்களே, என்னைப் பொறுத்தவரை பலமுறை இப்படிப்பட்ட பல பிரச்சினைகள், நம்முடைய மாநிலத்திற்கும், பக்கத்து மாநிலத்திற்கும் வந்தபோதெல்லாம் பொறுமை காத்திருக்கிறேன்.
கேரளாவுக்கும் நமக்கும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்துள்ளன. அப்போதெல்லாம் இரு மாநில ஒற்றுமை, அங்கு வாழ்பவரும் நமது சகோதரர்கள்தான், இங்கு வாழ்பவர்களும் நமது சகோதரர்கள்தான். கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் ஆகிய மொழி பேசுபவர்கள் எல்லாம் நமது சகோதரர்கள்தான். நமக்குள் சகோதச் சண்டை வேண்டாம் என்று கருதுகின்றவன் நான்.
கண்ணீர் விட்டுக் கேட்கிறேன்:
யாரோ சில சமூக விரோதிகள் இதை பெரியதாக ஆக்கி, தீப்பற்றச் செய்து விடுவார்கள் என்பதால்தான் பொறுமையாக இருந்து வருகின்றேன். ஆனால் எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை மத்திய அரசு உணரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இன்றைக்கு அங்கு சிறு துளியாக இருக்கின்ற பகை உணர்வு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு பொறி, பெருந்தீயாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் இந்தியாவினுடைய ஒற்றுமையின் ஒருமைப்பாட்டின் இறையாண்மையின் பெயரால் கேட்கிறேன். வெறும் இந்த தண்ணீருக்காக மாத்திரமல்ல, கண்ணீர் விட்டுக் கேட்கிறேன். இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பாற்றுங்கள். இந்தியாவை பலவீனப்படுத்தாதீர்கள் என்றார் கருணாநிதி.