For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உண்ணாவிரதம்-ரஜினி பங்கேற்பாரா?

By Staff
Google Oneindia Tamil News

Rajini
சென்னை: பெங்களூரில் தமிழர்களுக்கும், தமிழ்த் திரைப்படங்களுக்கும் எதிராக கன்னட அமைப்பினர் மேற்கொண்டுள்ள வன்முறையைக் கண்டித்து 4ம் தேதி தமிழத் திரையுலகினர் நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவுகிறது.

பெங்களூர் வன்முறையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகம் ஒன்று திரண்டு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக நேற்று நடந்த தயாரிப்பாளர் கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் இந்த உண்ணாவிரதத்தில் தமிழ்த் திரையுலகினர் அத்தனை பேரும் மொத்தமாக கலந்து கொள்ள வேண்டும்.

வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என எங்கிருந்தாலும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அப்படிக் கலந்து கொள்ளாதவர்கள் தமிழ் சினிமாவில் இனிமேல் நடிக்க முடியாது. அவர்களுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்போது போகஸ் ரஜினிகாந்த பக்கம் திரும்பியுள்ளது. அவர் மட்டுமல்லாமல் பிரகாஷ் ரய், அர்ஜூன் சர்ஜா, முரளி, பிரபு தேவா உள்ளிட்ட அனைத்து கன்னட கலைஞர்கள் பக்கமும் இப்போது தமிழக மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, அக்டோபர் 12ம் தேதி காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் போக்கைக் கண்டித்து, பாரதிராஜா தலைமையில் நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் ரஜினியைத் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த நாள் தனியாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார் ரஜினி. அதில் கன்னட நடிகர்கள் கூட்டாக கலந்து கொண்டனர். நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிய கலைஞர்கள் ரஜினியைப் போய் பார்த்து ஆதரவு தெரிவித்து விட்டு வந்தனர்.

இது வேறு மாதிரியான சிக்னலை கர்நாடகத்திற்கு அனுப்பியது. ரஜினி தமிழ் திரையுலகோடு சேர்ந்து நமக்கு எதிராக போராடவில்லை. தனியாகத்தான் இருக்கிறார் என்பது போல அங்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும், நெய்வேலி போராட்டத்தை ரஜினி விமர்சித்தும் பேசினார். உச்சநீதிமன்றத்தால் கூட தீர்க்க முடியாத பிரச்சினையை இந்தப் போராட்டம் தீர்த்து விடுமா என்று அவர் கோபமாக கேட்டார்.

அத்தோடு நில்லாமல், நதிகள் அனைத்தையும் தேசியமயமாக்குவதே இதற்கு ஒரே தீர்வு. அந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் அதற்கு ரூ. 1 கோடி நிதியுதவி அளிப்பேன் என்றும் ஆவேசமாக கூறினார். ரஜினிகாந்த்தின் அறிக்கையை அப்போது சரத்குமார்தான் செய்தியாளர்களுக்கு வாசித்துக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தான் தனியாக உண்ணாவிரதம் இருக்கக் காரணம், கர்நாடகத்தில் வசிக்கும் 50 லட்சம் தமிழர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான் என்றும் கூறினார் ரஜினிகாந்த். அவர் கூறியதில் நியாயம் இருந்ததும் நிஜம்.

இந்த நிலையில் மீண்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ரஜினிகாந்த். இம்முறை ரஜினிகாந்த் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பது என்ற மூடில் திரையுலகம் இருப்பதாக தெரிகிறது.

சென்னை திரும்பினார் ரஜினி:

இந் நிலையில் குசேலன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த ரஜினிகாந்த் இன்று ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார்.

உண்ணாவிரதம் குறித்து தனக்கு நெருக்கமான சிலருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. அதன் இறுதியல் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து ரஜினி முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக அவர் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X