பெங்களூரில் நாளை கன்னட நடிகர்கள் தர்ணா

இதுகுறித்து, கர்நாடக சினிமா வர்த்தக சங்க துணைத் தலைவரும், நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவருமான சாரா கோவிந்து கூறுகையில்,
ஓகேனக்கல் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்துக்கு நியாயம் கிடைக்க கோரி, பெங்களூர் டவுன் ஹாலில் 4ம் தேதி (நாளை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும். இதில் அனைத்து நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்கிறார்கள்.
தமிழக நடிகர்களின் போராட்டத்துக்கு எதிராக நாங்கள் போராடவில்லை. மக்கள் நலன் கருதி போராடுகிறோம்.
தென் இந்திய வர்த்தக சபையில் இருந்து நான் உள்பட 4 நியமன உறுப்பினர்களை நீக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. இதற்கு நிர்வாகக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றார்.
இவர்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும் தென் இந்திய வர்த்தக சபைத் தலைவருமான கே.ஆர்.ஜி. இரு நாட்களுக்கு முன் அதிரடியாக நீக்கியது நினைவுகூறத்தக்கது.
தமிழக பஸ்களுக்கு கறுப்பு மை:
இதற்கிடையே நேற்று கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பினர் பெங்களூர் பஸ் நிலையத்தில் தமிழக அரசு பஸ்களில் உள்ள தமிழ் எழுத்துகள் மீது கறுப்பு மை பூசினர்.
20க்கும் மேற்பட்ட கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பினர் கறுப்பு மை கொண்டு தமிழக அரசு பஸ்களின் மீது முதல்வர் கருணாநிதியும் தமிழகத்தையும் கண்டித்து வாசகங்கள் எழுதினர்.
தமிழ்நாடு அரசு என்று எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் மீது கறுப்பு மை பூசினர்.
அவர்கள் கலைந்து சென்ற பின் தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் வந்த போலீசார், உடனே பஸ்களை இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள் என்றனர்.
இதையடுத்து பேருந்துகளை அதிகாரிகள் உடனே தமிழகத்துக்கு கிளம்ப உத்தரவிட்டனர். இதனால் காலி பஸ்கள் கிளம்பிச் சென்றன. இந்த பஸ்களை நம்பி பின்னர் பேருந்து நிலையங்களுக்கு வந்தவர்கள் ஏமாற்றமடைய நேரிட்டது.
ஒசூர்-பெங்களூர் போக்குவரத்து பாதிப்பு:
அதே போல ஓசூர் அருகே தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூரில் இருந்து 12 கி. மீட்டர் தூரத்தில் உள்ள அத்திப்பள்ளி சர்க்கிளில் கன்னட ஜாக்ருதி வேதிகே என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பெண்களும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கோஷமிட்டபடி தமிழக தலைவர்களின் உருவ பொம்மைகளையும் எரித்தனர்.
இந்த போராட்டம் காரணமாக ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.