• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஒகேனக்கல் அல்ல; குடைக்கல்-ராஜேஷ்

By Staff
|

சென்னை: ஓகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிராக கர்நாடகத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் நடந்த தமிழ்த் திரையுலக உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய இயக்குனர் சீமான்,

காவிரி முதல் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கன்னடர்கள் முதலில் செய்வது தமிழர்களை அடிப்பதுதான். தமிழ் திரைப்படங்களைத் தடுப்பதுதான். இதை எத்தனை காலம் பொறுப்பது என்றார்.

ரஜினி அரசியலுக்கு வருவார்-விஜயகுமார்:

நடிகர் விஜயகுமார் பேசுகையி்ல், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ரஜினி கர்நாடகாவில் பிறந்தாலும் கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில்தான் வசித்து வருகிறார். அவரை கன்னடர் என்று சொல்லக்கூடாது. அவர் விரைவில் அரசியலுக்கு வருவார். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்றார்.

கவுண்டமணி கோபம்:

உண்ணாவிரத்தில் பங்கேற்பதற்காக வந்த நடிகர் கவுண்டமணி படு கோபமாக காணப்பட்டார். அவரிடம் போராட்டம் குறித்து கேட்டபோது, வருஷா வருஷம் தீபாவளி வருவது போல இந்தக் கலவரமும் வந்து போய்க் கொண்டுதான் உள்ளது.

சுமூகமாகப் போக வேண்டியதை விட்டு விட்டு சிலர் தங்களது சுயநலத்திற்காக அப்பாவி மக்களை அடிப்பது மிகப் பெரிய தவறு.

தியேட்டர்களை அடிப்பது, தமிழ்ப் படங்களை தடுப்பது என்று செய்வது ஏன் என்று புரியவில்லை. சினிமாக்காரர்கள் என்ன தப்பு செய்தோம் என்று எங்களைத் தாக்குகிறீர்கள்.

சினிமாவுக்கு ஏது லாங்குவேஜ். இங்கும்தான் மலையாளப் படம் வருகிறது, இந்திப் படம் வருகிறது, ஆங்கிலப் படம் வருகிறது. நாம் என்ன போராட்டமா நடத்துகிறோம். அங்கு மட்டும் ஏன் போராட்டம்.

மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் தலையிட்டு நிவாரணம் தேடித் தர வேண்டும். அதை விட்டு விட்டு தமிழர்களை அடிப்பது என்பது அநாகரீகமானது என்றார்.

திருப்பி அடிப்போம் - செந்தில்:

இந்தியாவில்தானே கர்நாடகம் இருக்கிறது. பாகிஸ்தானிலா இருக்கிறது. பாகிஸ்தானுடன் சண்டை வந்தால் திருப்பி அடிக்கிறோமா இல்லையா. அதுபோல அவர்கள் அடித்தால் நாமும் திருப்பி அடிப்போம்.

மீண்டும் நடக்கக் கூடாது - விஜய்:

இது சினிமாக் குடும்பத்தில் நடக்கும் கருத்து வேறுபாடு. இந்தப் போராட்டம், உண்ணாவிரதம் மறுபடியும் தமிழகத்தில் நடக்ககக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

சீண்டுவது தவறு - தனுஷ்:

தன்னடக்கமும், தன்மானமும்தான் தமிழனின் அடையாளம். அதை தப்பான இடத்தில் சீண்டிப் பார்ப்பது தவறு. நிறையப் பேச நினைக்கிறேன். ஆனால் அங்கு வாழும் தமிழர்களின் பாதுகாப்பை நினைக்க வேண்டியுள்ளது. இங்குள்ளவர்ளுக்கு பாதுகாப்பு செய்து கொண்டிருக்கிறோம். அதை அங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கலையுலகில் ஏன் அரசியல்-எஸ்.ஏ. சந்திரசேகர்:

தாகத்திற்கு தண்ணீர் கேட்டதற்காக கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அது மாத்திரம் அல்ல, தமிழ் படங்களைத் திரையிட்ட தியேட்டர்களும் தாக்கப்பட்டுள்ளன. அது ஏன் என்று புரியவில்லை.

முன்பு ஒரு எதிரி-தலைவாசல் விஜய்:

50 ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு ஒரு எதிரி. வெள்ளையர்களை எதிர்த்து துப்பாக்கி தூக்கினோம். இப்போது நமக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இது வேதனையாக இருக்கிறது.

தமிழகம், கர்நாடகம் தொடர்பாக எந்தப் பிரச்சினை வந்தாலும் முதல் இலக்காக தமிழ்த் திரையுலகம் உள்ளது. இதற்குக் காரணம் தண்ணீர்.

நதிகளை தேசியமயமாக்குவதே இதற்கு ஒரே தீர்வு. மத்திய அரசு இதில் தலையிட வேண்டும். இல்லாவிட்டால் இந்த சண்டை நீடித்துக் கொண்டேதான் இருக்கும். இது யாருக்கும் எதிரான போராட்டம் இல்லை. நல்ல மனிதர்களாக இருப்போம். ஒற்றுமையாக இருப்போம்.

வந்து அடிக்கவும் தெரியும் - ஷக்தி சிதம்பரம்

எங்களுக்கு சண்டை என்ற பெயரில் படம் எடுக்கவும் தெரியும். வந்து சண்டை போடவும் தெரியும். அதேபோல வந்தாரை வாழ வைக்கவும் தெரியும். அங்கு வந்து உண்டு இல்லை என்று பார்க்கவும் தெரியும்.

நிருபரை நெளிய வைத்த ரமேஷ்கண்ணா:

உண்ணாவிரதம் நடந்த இடத்திலிருந்தபடி நடிகர், நடிகையரை பேட்டி கண்ட ஒரு செய்தியாளர், நடிகர் ரமேஷ் கண்ணாவிடம், உண்ணாவிரதம் வன்முறையைத் தூண்டாதா என்று கேட்டு அவரிடம் மாட்டிக் கொண்டார்.

இந்தக் கேள்விக்கு ரமேஷ் கண்ணா பதிலளிக்கையில், உண்ணாவிரதம் வன்முறையைத் தூண்டும் என்று யார் சொன்னது. மகாத்மா காந்தி பயன்படுத்தி அகிம்சை ஆயுதம்தான் உண்ணாவிரதம். அது எப்படி வன்முறையைத் தூண்டும் என்று எதிர் கேள்வி கேட்டு அந்த நிருபரை நெளிய வைத்தார்.

ஒகேனக்கல் அல்ல; குடைக்கல்-ராஜேஷ்:

நடிகர் ராஜேஷ் பேசுகையில், ஓகேனக்கல் என்ற வார்த்தை கன்னட வார்த்தை. தமிழகத்துக்கு சொந்தமான குடைக்கல்லைத்தான் ஓகேனக்கல் என்று கன்னடர்கள் மாற்றி விட்டனர். இங்கு பேசிய அனைவரும் ஒகேனக்கல் என்றுதான் சொல்கிறார்கள். குடைக்கல் என்று சொல்வதே சரி என்றார்.

மன்சூர் அலிகான்:

நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், களி சாப்பிட்டுக் கொண்டிருந்த கன்னடர்களுக்கு விவசாயம் செய்ய கற்றுக் கொடுத்தவர்களே தமிழர்கள்தான் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X