பாக். வாங்கிய அதிநவீன சீன போர்க்கப்பல்
இஸ்லாமாபாத்: சீனாவிடமிருந்து அதிநவீன எஃப்- 22பி போர்க் கப்பலை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் அந் நாட்டு அதிபர் முஷாரப் கூறியதாவது:
பாகிஸ்தான் கடற்படைக்கு அதிநவீன எஃப்- 22பி ரக 4 போர்க் கப்பல்களை தயாரிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் 'பிஎன்எஸ்- சுல்ஃபிகார்' எனப் பெயரிடப்பட்டுள்ள முதல் போர்க் கப்பல் முழுமையடைந்து சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து பாகிஸ்தானுக்கு வந்து கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் மற்றும் சீனா கூட்டுத் தயாரிப்பில் 2 போர்க் கப்பல்களும் , 4வது கப்பலை முழுக்க முழுக்க பாகிஸ்தானில் உள்ள கராச்சி கப்பல்கட்டும் தளத்திலும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2013க்குள் கடைசி போர்க் கப்பல் கடற்படையில் சேர்க்கப்படும்.
நீர்மூழ்கி நாசகாரி ஏவுகணைகள் கொண்ட ஹெலிகாப்டர்களை தரையிறக்கும் வசதி, நிலம் மற்றும் ஆகாயத்தில் இலக்குகளை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகள் இந்த போர்க் கப்பல்களில் நிறுவப்பட்டுள்ளன.
இந்த போர்க்கப்பல் பேரத்தின்மூலம் சீனாவுடனான பாகிஸ்தானின் ராணுவ உறவு மேலும் பலப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புக்கும் கடற்படை நவீனமயத்துக்கும் இந்த போர்க்கப்பல்கள் துணைபுரியும் என்றார் முஷாரப்.
முன்னதாக ஷாங்காய் கப்பல்கட்டும் தளத்தில் நேற்று நடந்த விழாவில் முதல் எஃப் 22பி ரக போர்க்கப்பலை பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முகமது அஃப்ஸல் தாஹீர் ஏற்றுக் கொண்டார். சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.