உணவுப் பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை - அரசு
சென்னை: வெளிமாநிலங்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை கடத்தினாலோ அல்லது பதுக்கினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் விலைவாசி உயர்வுப் பிரச்சினை பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
மத்திய அரசு விலைவாசியையும், பண வீக்கத்தையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் மாநில அரசு இறங்கியுள்ளது. அதன்படி முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் திரிபாதி, நிதித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, குடிமைப் பொருள் துறை செயலாளர்கள், குற்றப் புலனாய்வுத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, நிதித் துறை செயலாளர் கு. ஞானதேசிகன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர் கே. சண்முகம், வேளாண்மை துறை செயலர் சுர்ஜீத் கே. சௌத்ரி, உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் கே.ராஜாராம், வேளாண்மை துறை ஆணையர் சி. கோசலராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கே. பனீந்தர ரெட்டி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக வரித்துறை இயக்குனர் அதுல் ஆனந்த், குடிமை பொருள் வழங்கல் (குற்றப்புலனாய்வுத் துறை) காவல் துறை தலைவர் ஆஷிஷ் பேங்க்ரா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
- சமையல் எண்ணெய் மற்றும் அரிசி இருப்பு வைப்பதில் சில்லறை மற்றும் மொத்த வணிகத்திற்கு உடனடியாக வரம்புகள் நிர்ணயிக்கப்படும்.
- கோதுமை, கோதுமை மாவு மற்றும் பயறு வகைகளுக்கு மொத்த மற்றும் சில்லறை வணிகர்களுக்கு இருப்பு வைக்க உள்ள வரம்புகள் தீவிரமாக அமல்படுத்தப்படும். இதனால், மொத்த வணிகத்தில் கோதுமை 100 டன்னுக்கும், பயிறு வகைகள் 250 டன்னுக்கும் அதிகமாக இருப்பு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
- சில்லறை வணிகர்களுக்கு கோதுமை 3.125 டன்னுக்கு அதிகமாகவும், பயறு வகைகள் 6.25 டன்னுக்கு அதிகமாகவும் இருப்பு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
- துவரம் பருப்பு போன்ற பயறு வகைகள் மற்றும் பாமாயில் ஆகியவற்றின் உற்பத்தி இந்தியாவில் குறைவாக இருப்பதால், தமிழகத்தின் தேவையை நிறைவேற்ற பயறு வகைகளை மியான்மர் (பர்மா) நாட்டிலிருந்தும், பாமாயிலை மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் நேரடியாக தமிழக அரசே இறக்குமதி செய்ய உணவு வழங்கல் துறை ஆணையர் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழுவினை 24.04.2008 அன்று பர்மா மற்றும் மலேசியா நாடுகளுக்கு அரசு அனுப்பி வைக்கும்.
- பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் கோதுமையை தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து வழங்கவும், ரவை, மைதா போன்ற பொருட்களை சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் தொடர்ந்து வழங்கவும் தேவைப்படும் கோதுமையை நுகர்பொருள் வாணிபக் கழகமே பஞ்சாப் போன்ற மாநிலங்களிலிருந்து நேரடியாக வாங்கி விநியோகம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.
- உணவுப் பொருட்கள் பதுக்கப்பட்டாலோ, வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டாலோ அவற்றைத் தடுக்க உணவு வழங்கல் துறை மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மூலமாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
- மாநில அளவில் தலைமைச் செயலாளரின் தலைமையில் விலைவாசி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு வாரந்தோறும் கூடி ஆய்வு செய்து அவ்வப்போது உள்ள விலை நிலவரத்திற்கேற்ப அத்தியாவசியப் பொருட்களின் தேவை மற்றும் கிடைக்கின்ற அளவை அறிந்து பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக வெளிமாநிலங்களிலிருந்து பருவ காலங்களில் கொள்முதல் செய்து இருப்பு வைப்பதுடன் நியாய விலையில் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- துவரம் பருப்பு பற்றாக்குறையை ஈடுகட்ட ஒரு மாற்றுத் தீர்வாக கனடா நாட்டிலிருந்து சமையல் பருப்பை இறக்குமதி செய்து பரீட்சார்த்த முறையில் குறைந்த விலையில் பொது விநியோகத்திட்டத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தற்போது வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு, ரவை, மைதா போன்றவை தொடர்ந்து வழங்கப்படும்.
- நீண்ட காலத் தீர்வாக, தமிழ்நாட்டில் நெல் உற்பத்தித் திறனை, "செம்மை நெல் சாகுபடி முறை'யைப் பரவலாக்கி அதிகரிக்கவும், பயறு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.