ஓ.பி. கூட்டத்தில் அதிமுகவினரே செருப்பு வீச்சு!
தேனி: தேனியில் முன்னாள் முதல்வரும் மாஜி மந்திரியுமான ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்ட அதிமுக இளைஞர் பாசறை கூட்டத்தில் செருப்பு வீச்சு நடந்தது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ளது ஜக்கம்பட்டி. இங்கு அதிமுக சார்பில் இளைஞர் பாசறை துவக்கவிழா ஓ.பி தலைமையில் நேற்று நடந்தது.
அப்போது மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் தனது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கி இருப்பதாகவும், மற்ற சமூகத்தினரை புறக்கணிப்பதாகவும் கூறி அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் ரகளையில் ஈடுபட்டார்.
இதனால் தங்கத்தமிழ் செல்வன் ஆதரவாளர்களுக்கும், தங்கவேல் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்பு அது கைகலப்பில் முடிந்தது.
இதில் ஆவேசம் அடைந்த ஒருவர் தங்கத்தமிழ் செல்வன் மீது செருப்பு வீசினார். டேய் அண்ணே மேலயே செருப்பு வீசுறியா என்று கேட்டபடி பதிலுக்கு தங்கத்தமிழ் செல்வனின் ஆட்களும் செருப்பையும், சேர்களையும் வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு எல்லா திசைகளிலும் செருப்புகள் பறந்தன. சேர்கள் ரெக்கை கட்டி உலா வந்தன.
இதையடுத்து மேடையைவிட்டு எஸ்கேப் ஆன ஓ.பியை கட்சி அவரது கோஷ்டியினர் பாதுகாப்பாக வெளியே அழைத்து சென்று காரில் ஏற்றிவிட்டனர்.
செருப்பு வீச்சுடன் நடந்த இந்த அடிதடியில் 25க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காயமடைந்தனர்.
இது குறித்து தங்கவேல் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதிமுக மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன், அவரது உதவியாளர் வெற்றி, எம்எல்ஏ கணேசன் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.