டிஎன்ஏ சோதனை: இழுபறிக்குப் பின் தாயிடம் சேர்ந்த குழந்தைகள்
சென்னை: கடந்த ஒரு வாரமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த குழந்தை மாறாட்ட சர்ச்சை நேற்று முடிவுக்கு வந்தது. டி.என்.ஏ. சோதனை அடிப்படையில், இரு குழந்தைகளும், அவரவர் தாயிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனையில் காமாட்சி என்ற பெண்ணுக்கும், பர்கத் பேகம் என்பவருக்கும் கடந்த 17ம் தேதி ஒரே நேரத்தில் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் பர்கத் பேகத்திடம் பெண் குழந்தையையும், காமாட்சியிடம் ஆண் குழந்தையையும் மருத்துவமனை ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
ஆனால் டாக்டர்கள் ரவுண்ட்ஸ் வந்தபோது குழந்தைகள் மாறியிருப்பதைப் பார்த்து பர்கத்திற்குத்தான் ஆண் குழந்தை பிறந்தது, காமாட்சிக்கு பெண் குழந்தை பிறந்தது என்று கூறினர். இதனால் சர்ச்சை எழுந்தது.
குழந்தைகளை மாற்றப் பார்க்கிறீர்கள் என இரு பெண்களின் உறவினர்களும் போர்க்கொடி உயர்த்தினர். குழந்தை மாறாட்டம் நடந்துள்ளதாக கூறிய அவர்கள், இருவருமே தங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று கோரி போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி டி.என்.ஏ. சோதனை நடத்துவது, அதன் முடிவை இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்வது என்ற முடிவுக்கு வரப்பட்டது.
இதையடுத்து இரு குழந்தைகளும் தாய்களிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டன. அவர்களை நர்ஸ்களேப் பராமரித்து வந்தனர். தாய்ப்பாலை மட்டும் பர்கத் மற்றும் காமாட்சியிடமிருந்து எடுத்து வந்து குழந்தைகளுக்கு கொடுத்தனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ஜார்ஜ் டவுன் 14வது கோர்ட் நீதிபதி சுஜாதா மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் டிஎன்ஏ சோதனைக்கு அவர் அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து இரு குழந்ததைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
அவசர நிலை கருதி சோதனை முடிவை விரைவாக தர ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று மாலை சோதனை முடிந்து அதுதொடர்பான அறிக்கை கோர்ட்டில் வழங்கப்பட்டது. இந்த அறிக்கையை நீதிபதி சுஜாதா, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் காமினியிடம் ஒப்படைத்தார். அவர் அறிக்கையை மருத்துவமனை டீன் மைதிலி பாஸ்கரிடம் வழங்கினார்.
45 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், பர்கத் பேகத்திற்கு ஆண் குழந்தையும், காமாட்சிக்கு பெண் குழந்தையும் சொந்தம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இரு பெற்றோர்களையும் அழைத்து அவர்களுக்குரிய குழந்தைகளை டாக்டர் மைதிலி பாஸ்கர் ஒப்படைத்தார்.
கடந்த 6 நாட்களாக பெற்ற குழந்தையைப் பார்க்க முடியாமல் தவித்து வந்த இரு தாய்மார்களும், குழந்தைகளை வாங்கிக் கொஞ்சி மகிழ்ந்தனர். தாயின் முதல் ஸ்பரிசம் கிடைத்ததால் அந்தக் குழந்தைகளும் புன்னகையுடன் காணப்பட்டன.
பர்கத் பேகத்தின் கணவர் சையத் அன்சார், தங்களுக்கு ஆண் குழந்தை கிடைத்ததையடுத்து மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அதேபோல காமாட்சியின் கணவர் இளங்கோவும் மகிழ்ச்சியுடன், எனக்குப் பெண் குழந்தைதான் பிறந்துள்ளது என்பதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தையே கலக்கி விட்ட இந்த குழந்தைகள் மாறாட்ட குழப்பம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.