
திருச்சி என்ஐடியில் வரும் கல்வியாண்டு முதல் 27% கோட்டா அமல்
திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 27 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அதன் இயக்குநர் எம்.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருகிற கல்வியாண்டு முதல் பிடெக் படிப்புக்கு கூடுதலாக 27 சதவீத மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தற்போது பிடெக்கில் 530 பேர் சேர்க்கப்படுகின்றனர்.
இது வரும் கல்வியாண்டிலிருந்து 27 சதவீதம் அதிகரிக்கும். இதன் மூலம் 27 சதவீத இட ஒதுக்கீட்ைட எளிமையாக அமல்படுத்த முடியும்.
விடுதி வசதி, ஆசிரியர் பற்றாக்குறையின்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திருச்சி என்ஐடி விளங்குகிறது.
இட ஒதுக்கீடு முறை, இளநிலைப் படிப்புகளுக்கு மட்டுமல்லாது மேல் நிலை படிப்பு, உயர் ஆய்வுப் படிப்பு ஆகியவற்றிலும் பின்பற்றப்படும்.
நான்கு ஆண்டுகளுக்குள் இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த என்ஐடி நிறுவனங்களுக்கு மத்திய மனித வள அமைச்சகம் கால அவகாசம் கொடுத்துள்ளது என்றார் அவர்.