சேது திட்டம்: ஏப். 30ம் தேதி முதல் வழக்காக விசாரணை

சர்ச்சைக்குரிய ராமர் பாலம் உள்ள பகுதியில், சேது சமுத்திரத் திட்டத்தை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்குப் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவதாகவே உள்ளன.
ராமர் பாலம் இருப்பதற்கான ஆதாரம் இல்ைல என்பதே மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் கருத்தாகும். ராமர் பாலம் எனக் கூறப்படும் ஆதாம் பாலம் இயற்கையாக உருவான அமைப்பாகும். எனவே திட்டத்தை நிறைவேற்ற இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அதேசமயம், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்டோர் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும். மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இந்த நிலையில் இவ்வழக்கை அவசரம் கருதி முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் உச்சநீதிமன்றத்திற்குக் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை இன்று பரிசீலித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், எம்.கே.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஏப்ரல் 30ம் தேதி முதல் வழக்காக இது விசாரிக்கப்படும் என அறிவித்தனர்.