2 சாலை விபத்துகள்: பிஷப் உள்பட 8 பேர் பலி
தாராபுரம்&பழனி: தமிழகத்தில் நடந்த இரு சாலை விபத்துகளில் பிஷப் உள்பட 8 பேர் பலியாயினர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த பிஷப் டைட்டஸ் (எ) கடப்பசாமி (47). மதுரை இந்தியன் சர்ச் அசோசியேசன் தலைவராக இருந்தார். திருச்சபை சார்பில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர்.
70 பேர் ஒரு பஸ்சிலும், பிஷப் டைட்டாஸ் உள்பட 10 பேர் வேனிலும் சென்றனர்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டம் என்ற இடத்தில், திருப்பூரிலிருந்து தூத்துக்குடிக்கு பனியன் லோடு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி, வேன் மீது மோதியது.
இதில் பிஷப் டைட்டஸ், குளச்சலைச் சேர்ந்த சர்ச் பொறுப்பாளர் டேவிட்ராஜ் (35). அவரது மகள் ஸ்வீட்டி (15), மதுரையை சேர்ந்த சிமியோன் (28), வேன் டிரைவர் பாலு (32) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
படுகாயமடைந்த ஜோனத்தன் (35), பிரபாகரன் (28), ஆதி (32) கிறிஸ்டி (25), ஜோயல் (8) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பழனி அருகே இன்னொரு விபத்து:
அதேபோல பழனி அருகே நடந்த இன்னொரு விபத்தில் கணவன் மனைவி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சின்ன கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த கூட்டுறவு வங்கி செயலர் மகாலிங்கம் (37). இவரது குடும்பத்தினரும் உறவினர்கள் உள்பட 19 பேர் பழனி கோயிலுக்கு வேனில் சென்றனர்.
இன்று அதிகாலை புளியால் அருகில் சென்று கொண்டிருந்தபோது கோவையில் இருந்து திருவாடானைக்கு சென்ற அரசு பஸ், வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மகாலிங்கம் (37), அவரது மனைவி மஞ்சுளா (35) மசபாவ்யா (5) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
படுகாயமடைந்த கலா (26), கருப்பையா (24) ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையிலும், வேன் டிரைவர் செல்வராஜ் (22) மற்றும் ரமேஷ்(20), கண்ணன்(26), முத்துராமன்(28), தினேஷ் (5) ஆகியோர் படுகாயமடைந்தனர்.