ராகுல் காந்தியை எதிர்த்து காங். எம்.பி. விலகல்
டெல்லி: ராகுல் காந்தியைச் சுற்றிலும் உள்ள அவரது ஆலோசகர்களின் போக்கைக் கண்டித்து ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி. அகிலேஷ் தாஸ் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டவர்தான் அகிலேஷ் தாஸ்.
ராகுல் காந்தியைச் சுற்றிலும் உள்ளவர்கள், கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருவதாகக் கூறி கட்சியிலிருந்தும், ராஜ்யசபா எம்.பி பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான அகிலேஷ் தாஸ், இன்று காலை மாநிலங்களவை கூடியதும், மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் தனது ராஜினாமாக் கடிதத்தை வழங்கினார் தாஸ்.
பின்னர் ராஜ்யசபாவின் நடுவில் நின்று கொண்டு, எனக்கு காங்கிரஸ் கட்சி மீதான நம்பிக்கை போய் விட்டது என்று கூறியபடி வெளியேறினார். இதனால் சபையில் சலசலப்பு நிலவியது.
பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நான் இறங்கி விட்டேன். இப்போதுதான் நான் நிம்மதியாக உணர்கிரேன்.
ராகுல் காந்தியைச் சுற்றிலும் உள்ளவர்களால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது. ராகுலைச் சுற்றிலும் உள்ளவர்களுக்குப் பிடிக்காதவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள், பாதிப்பை சந்திக்க வேண்டி வருகிறது.
ராகுலைச் சுற்றிலும் ஒரு அதிகார வட்டம் உள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதைத் தாண்டித்தான் ராகுல் காந்தியை அடைய முடிகிறது. இது வருத்தம் தருகிறது என்றார் தாஸ்.
தாஸ் மத்திய இரும்புத் துறை இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த மாதம் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது தாஸ் கழற்றி விடப்பட்டார். இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது ராகுல் காந்தியின் பரிந்துரைப்படி இரு இளம் அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.