எண்ணெய் நிறுவன நஷ்டத்தை ஈடுசெய்ய கடன் பத்திரங்கள்
டெல்லி: பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்களின் 50 சதவீத நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் கூடுதலாக கடன் பத்திரங்களை வெளியிட அனுமதிக்க மத்திய நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் உள்நாட்டில் இவற்றின் விலைகள் குறைவாகவே உள்ளன. இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 70,579 கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நஷ்டத்தில் குறைந்தது 50 சதவீத தொகையாவது ஈடுகட்டும் வகையில் கூடுதலாக கடன் பத்திரங்களை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா வேண்டுகோள் வைத்தார்.
இதை ஏற்ற ப.சிதம்பரம், ரூ.35,300 கோடிக்கு கடன் பத்திரங்கள் விரைவில் வெளியிடப்பட ஒப்புதல் அளித்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் மொத்தம் ரூ.20,333 கோடி அளவுக்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.