வெடிகுண்டு புரளி-மதுரை ஐகோர்ட்டில் பதற்றம்
மதுரை: மதுரை உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம போன் அழைப்பு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
மதுரை உயர் நீதிமன்றத்துக்கு நேற்று ஒரு மர்ம போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நீதிமன்றத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீசில் நீதிமன்ற பதிவாளர் புகார் செய்தார். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்துக்கு விரைந்து வந்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
நீண்ட நேரம் சோதனை செய்தும் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கடந்த 8ம் தேதியும் ஒரு மர்ம போன் அழைப்பு வந்தது. அதிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. தீவிர சோதனையில் அது புரளி என்பது தெரிய வந்தது. அப்போது பேசிய அதே நபரே மீண்டும் இப்போது புரளியை கிளப்பியிருப்பாரோ என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து போன் அழைப்புகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.