For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடு வியக்கும் வண்ணம் கருணாநிதி பிறந்த நாள் விழா: அன்பழகன்

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்த நாளை நாடே வியக்கும் வண்ணம் திமுகவினர் கொண்டாட வேண்டும் என திமுகவினருக்கு கட்சிப் பொதுச் செயலாளரும், நிதியமைச்சருமான க.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி, நாடெங்குமுள்ள கழகத் தோழர்கள் நம் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாடும் முறையில், அவரை நேரில் சந்தித்து வாழ்த்துரைத்து சால்வை அணிவிப்பதும், மலர் மாலை சூடி அழகு பார்ப்பதும் வாடிக்கை.

எனவே ஜூன் 3ம் நாள் கருணாநிதியின் 85வது பிறந்த நாளைக் கொண்டாடப் போகிறோம் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தபோதுதான், இந்த ஆண்டு என்னுடைய பிறந்த நாளையொட்டி என்னைக் காண வருவது, வாழ்த்த வருவது, நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். அந்த வாரம் முழுவதும் நான் சென்னையில் இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதைப் போலவே என்னையும் மிகுந்த சோர்வடையச் செய்துள்ளது.

தலைவர் பிறந்த நாளில் தொண்டர்கள் உணர்ச்சிமயமாக நேரில் வந்து சந்தித்து அவரை வாழ்த்தி மகிழும்போது தான் மிகுந்த எழுச்சி பெறுகின்றனர். வாழ்த்துக்களை ஏற்றிடும் பணியிலிருந்து தமக்கு விலக்கும், ஓய்வும் வழங்க வேண்டும் என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது எனக்கு வியப்பைத் தருகிறது.

கழக மாநாடுகளில் தொண்டர்களின் உற்சாக முகங்களையும், வாழ்த்தொலிகளையும் கேட்கும்போதெல்லாம் நான் பெரும் உற்சாகம் அடைகிறேன் என்று அவர் குறிப்பிடுவார். தமது ஓய்வில்லாப் பணிகளுக்கிடையே தாம் இளைப்பாறுவது, இலக்கியக் கூட்டங்களிலும், கவியரங்கங்களிலும், கலந்து கொள்ளும்போதுதான் என்று அவரே பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு மாறாக, தன்னைக் காண வர வேண்டாம், வாழ்த்த வேண்டாம் என்று அவர் அறிக்கையில், குறிப்பிடுவது அவர் மனதிலே, ஏதோ ஒரு கவலையை வைத்துக் கொண்டு அந்த வருத்தத்தில் இப்படிச் சொல்கிறாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

அவரது 2வது அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டம் தொங்கலிலே இருக்கும்போதும், தீவிரவாதத்தால் நாட்டில் விபரீதங்கள் விளைந்திடும் காலகட்டத்திலும், கூட இருந்தே குழி பறிப்போரின் செயல்கள் தொடர்ந்திடும் வேளையிலும் தான் எதற்காக பிறந்தோம் என்று எண்ணத் தோன்றுவதாகவும், அதனால்தான் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று எண்ணுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டம் அவரது முனைப்பான திட்டமிட்ட முயற்சியாலேயே இன்று செயல்வடிவம் பெற்றுள்ளது. அதனை நிறைவேற்றுவதில், சில இடர்களை, நச்சு மனதினர் செய்வதால் அத்திட்டம் நிறைவேற்றப்படுவதில் சற்று காலதாமதம் ஏற்படாலமெனினும் அது நிறைவேற்றப்பட்டே தீரும் என்பது காலத்தின் கட்டாயம்.

தீவிரவாத செயல்களுக்கு எதிராக மக்களுக்கு நம்பிக்கையூட்டி, எதிர்த்து நிற்கும் ஆற்றலை வளர்க்க வேண்டுமே தவிர சோர்ந்து விடக் கூடாது என்பதும் அவர் அறியாததல்ல.

மேலும் கூட இருந்தே குழிபறிப்போரின் செயல்களை அவர் புதிதாக காணவில்லையே. சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலகட்டத்திலிருந்தும், திமுகவின் வரலாற்றிலும் நாம் எத்தனையோ குழிபறிப்போர்களைச் சந்தித்திருக்கிறோம். அப்படிப்பட்ட பல வரலாற்று நிகழ்ச்சிகளை அவர் எதிர் கொண்டதையும், அவற்றை ஈடு கொடுத்துப் புறந்தள்ளியதையும், அவரது நெஞ்சுக்கு நீதியைப் படித்த அனைவருமே ஏற்றுக் கொள்வார்கள்.

அப்படிப்பட்ட நச்சு உள்ளங்கள் மகிழ்ச்சி அடைவதற்கு வாய்ப்பளிக்கவா நாம் அவரது பிறந்த நாளைக் கொண்டாடாமல் இருக்க முடியும்.

எனவே இயக்கத்தின் இதயத் துடிப்பின் அடையாளமான இந்த விழாவை, தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை பேரார்வத்துடன் கொண்டாடுமாறு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அவரது மனக் கவலைக்கு மாற்று மருந்தாக, மகிழ்ச்சிப் பெருக்கால் மலர்ந்த முகத்தோடும், பல்லாண்டு வாழ வாழ்த்தும் நெஞ்சோடும் கழகத் தோழர்கள், தோழியர்கள் அனைவரும் திரண்டு வந்து, தமிழினத் தலைவர் கருணாநிதியின் 85வது பிறந்த நாளை இந்த நாடே வியக்கும் வண்ணம் கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார் அன்பழகன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X