ஜெவுக்கு எதிரான வழக்கை தினந்தோறும் நடத்த உத்தரவு
சென்னை: வருமான வரி வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக அடிப்படை முகாந்திரம் உள்ளதாகக் கூறியுள்ள உயர் நீதிமன்றம் இந்த வழக்கை வேகமாக முடிக்கும் வகையில் தினந்தோறும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1993-94ம் ஆண்டுக்குரிய வருமான வரிக் கணக்கை காட்டவில்லை. இது குறித்து வருமானவரித் துறை, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் 1997ல் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி தள்ளுபடி செய்தது. 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் சாட்சி விசாரணையை சமீபத்தில் எழும்பூர் நீதிமன்றம் ஆரம்பித்தது.
இதையடுத்து தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா புதிய மனு தாக்கல் செய்தார். 1993-94ம் ஆண்டில் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை எழும்பூர் நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் அவர் அளித்த தீர்ப்பில்,
வரி கட்டவில்லை என்று 1997ம் ஆண்டு ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 6.2.2001ம் ஆண்டில் உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணைக்கு தேதி குறித்து, 8 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. அந்த உத்தரவு இன்னும் அமலில் உள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் வருமானவரி துறை அதிகாரியை சாட்சியாக எழும்பூர் நீதிமன்றம் விசாரித்திருக்கிறது. சாட்சி விசாரணையை தொடங்கி விட்டால், அதை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.) 309ம் பிரிவு கூறுகிறது.
ஆகவே சாட்சி விசாரணையை தனித்தனியாக பிரித்து விசாரிக்க முடியாது. மேலும், இந்த வழக்கில் தினந்தோறும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு எதிராக அடிப்படை முகாந்திரம் இருப்பது தெரிகிறது.
இதனால் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. அதே நேரத்தில் ஜெயலலிதாவின் மனுவுக்கு வருமானவரித் துறை 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்.
இந்த மனு மீதான விசாரணை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்றார்.