சிவகாசி ஜெயலட்சுமி மகன், மகள் கோர்ட்டில் ஆஜர்
மதுரை: சிவகாசி ஜெயலட்சுமியின் மகனும், மகளும் நேற்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
ஏட்டு முதல் எஸ்.பி. வரை தனது வலையில் வீழ்த்தியும், பல்வேறு மோசடிகள் செய்தும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலட்சுமி.
அவர் மீதான வழக்குகளில் ஒன்று, ஜெயலட்சுமியும், இன்ஸ்பெக்டர் இளங்கோவனும் செய்த மோசடிகள். இளங்கோவனின் உறவினரான நகைக் கடை அதிபர் முருகவேலிடிம், ஜெயலட்சுமி இன்ஸ்பெக்டர் உடையில் சென்று நகைகள் வாங்கினார். அதில் பல லட்சம் பணத்தை தராமல் மோசடி செய்து விட்டார். இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், ஜெயலட்சுமி தனது உறவினரை மோசடி செய்ததால் ஆத்திரமடைந்த இளங்கோவன், சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன் மற்றும் முருகவேல், ரவிசங்கர், சண்முகம் ஆகியோருடன் சேர்ந்து ஜெயலட்சுமியின் தாயார் திருவேங்கடத்தம்மாள், மகள் அபிநயா, மகன் கோகுல் ஆகியோரை காரில் கடத்தினார்.
இதுகுறித்து உயர் காவல் அதிகாரிகளுக்கு ஜெயலட்சுமியின் தந்தை அழகிரி சாமி புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பாகவும் இளங்கோவன் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மதுரை தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் நேற்று சம்பந்தப்பட்ட அனைவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி வில்லியம்ஸ் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இளங்கோவன் தரப்பில் 6 பேரும் ஆஜராகியிருந்தார்கள். அதேபோல ஜெயலட்சுமியின் தாயார், மகள், மகன் ஆகியோரும் வந்திருந்தனர். தந்தை அழகிரிசாமி உடல் நலக்குறைவு காரணமாக வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சாட்சிகள் விசாரணை ஜூன் 25ம் தேதி தொடங்கும் என அறிவித்த நீதிபதி விசாரணையை அன்றைக்கு ஒத்திவைத்தார்.