For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவின் பழி வாங்கும் நடவடிக்கை: குருவை கொல்ல சதி- ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

Ramdoss
சென்னை: பாமக எழுப்பி வரும் அரசியல் பிரச்சினைகளை அரசியல்ரீதியாக சந்திக்க வேண்டுமே தவிர, அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக பழி வாங்கும் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விடக்கூடாது என திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பெரம்பலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் வன்னியர் சங்கத் தலைவரும், பாமக முக்கிய பிரமுகருமான காடுவெட்டி குரு, முதல்வரையும், அமைச்சர்களையும் மிகக் கடுமையாகத் தாக்கி பேசிய வீடியோவை முதல்வர் கருணாநிதியிடம் அமைச்சர் ஆற்காடு வீராசாமி வழங்கினார்.

இதையடுத்து இதையடுத்து நான்கைந்து நாட்களில் திமுக உயர்நிலை குழு கூடி பாமகை கூட்டணியிலிருந்து கழற்றி விடுவது குறித்து முடிவெடுக்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

இந் நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திப் பேசிய முதல்வர், சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு ஏதோ பேசியதாகவும், அவர் பேசியதாக சொல்லப்படும் சி.டி. இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

குரு பேசியதாக சொல்லப்படும் கூட்டம் தெரு முனையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டம் அல்ல. அவர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

பொதுக்குழு உறுப்பினர்களை தவிர்த்து வேறு யாரும் அதில் பங்கேற்க முடியாது. அத்தகைய கூட்டத்தில் குரு பேசிய சி.டி. தங்களிடம் இருப்பதாக முதல்வர் சொல்கிறார்.

குரு பேச்சை ஒட்டு கேட்டது யார்?:

கட்சிப் பொதுக்குழு உறுப்பினர்களை தவிர்த்து வேறு யாரும் பங்கேற்க முடியாத ஒரு கூட்டத்தில் குருவின் பேச்சை ஒட்டுக்கேட்டு பதிவு செய்து கொடுத்தவர்கள் யார்? என்பதெல்லாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இது ஊருக்கே தெரிந்த ரகசியம் தான். (உளவுத் துறையை மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார் ராமதாஸ். ஏற்கனவே தனது தொலைபேசியை உளவுத் துறை ஒட்டுக் கேட்பதாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது)

அந்தக் கூட்டம் நேற்றைக்கு நடந்து இன்றைக்கு சி.டி. கிடைத்திருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள். குரு பங்கேற்று பேசிய அந்த பொதுக்குழு ஆறு மாதத்திற்கு முன்பு, அதாவது கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி பெரம்பலூரில் நடைபெற்றதாகும்.

அதற்கு முன்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அரியலூரில் பாமக இளைஞர் சங்க மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்காக யாரோ ஒருவரை மிரட்டி நன்கொடை வசூல் செய்ததாக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் முன்னணியினர் சிலர் மீது ஐந்து மாதங்கள் கழித்து வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது. யாரை மிரட்டி நன்கொடை கேட்டார்கள் என்று புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ, அந்த நபர் புகார் கொடுக்கவில்லை.

பொங்கலன்று பாமகவினர் கைது:

திமுக சட்டபேரவை உறுப்பினரின் மைத்துனரான நெடுஞ்சாலைதுறை அதிகாரி ஒருவரிடம் புகார் பெற்று வழக்குபதிவு செய்து தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று பாமகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வன்முறையில் திமுகவினர்:

திமுக அரசின் இந்த பழி வாங்கும் நடவடிக்கை பெரம்பலூர் மற்றும் அரியலூர்ப் பகுதிகளில் பாமகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் ஆளுங்கட்சியினரால் பாமகவினர் கடுமையாக தாக்கப்பட்டனர். என்னுடைய உருவப் பொம்மைகளை திமுகவினர் பல இடங்களில் தீ வைத்து கொளுத்தினர். பொதுச் சொத்துகளை அடித்து நொறுக்கி, நாசமாக்கி, வன்முறை செயல்களில் ஈடுபட்டனர்.

தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி:

திமுகவினரின் இத்தகைய வன்முறை நிகழ்வுகள் மற்றும் கொந்தளிப்பான நிலைமையின் பின்னணியில் ஜனவரி மாதம் 6ம் தேதி பெரம்பலூரில் பாமகவின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் குரு கலந்து கொண்டு பேசியதை தான் இன்றைக்கு புதியதாக பேசியிருப்பதை போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

கருணாநிதி பேச்சு வியப்பளிக்கிறது:

ஆறு மாதத்திற்கு முன்பு பேசியதாக சொல்லப்படும் கருத்துகளை இன்றைக்கு பிரச்சினையாக்கியிருப்பதுடன், ஒரு கொலைச் சதி நடைபெற்று அந்த சதியின் காரணமாக வெளிப்பட்டவை என்றும், அந்த சதிக்கு உடந்தையாக யார் யாரோ உட்கார்ந்து பேசியிருக்கிறார்கள் என்றும், இனிமேல் தான் சி.டியை போட்டு கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை போல முதல்வர் பேசியிருப்பது வியப்பாக இருக்கிறது.

மணிக்கு போட்டு காட்டிய சிடி:

இதற்கு முன்னரே, பலமுறை பல தலைவர்களிடம் முதல்-அமைச்சர் இது பற்றி பேசியிருக்கிறார். சி.டியை போட்டும் காட்டியிருக்கிறார். வன்னியர் சங்க தலைவர் குரு மீது வேண்டுமென்றே போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று முறையிட சென்ற எங்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணியிடமும், இந்த சி.டி. போட்டு காட்டப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கையில் இன்றைக்கு புதியதாக கிடைத்திருப்பதை போல பேசி பிரச்சினையை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்.

அரசியல்ரீதியாக பதிலளிக்க முடியாத திமுக:

பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் ரீதியாக எழுப்பி வரும் பிரச்சினைகளையும், மக்கள் மன்றத்தில் அது எடுத்து வைத்து வரும் வாதங்களையும் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், அரசியல்ரீதியான வாதங்களுக்கு, அரசியல்ரீதியாக பதிலளித்து பாமகவை களங்கப்படுத்த முயன்று அது முடியவில்லை என்றதும் வன்முறை கட்சி என்று முத்திரையை குத்தி பாமகவை களங்கப்படுத்தவும், பொய் வழக்குகள் போட்டு பாமகவினரை பழி வாங்கவும் போகிறார்கள் என்பதைத் தான் முதல்வரின் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது.

சதி வலை பின்னுகிறார்கள்:

குருவின் பேச்சுக்குப் பின்னால் ஒரு சதி இருப்பதாகவும், அதற்கு உடந்தையாக யார், யாரோ பேசியிருக்கிறார்கள் என்றும் முதல்வர் பேசியிருப்பதன் மூலம் குருவை மட்டுமின்றி பாமக முன்னணியினர் பலரையும் கைது செய்து பழி வாங்க ஒரு மிகப்பெரிய சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்றும் சதி வலை பின்னப்பட்டிருக்கிறது என்பதும் தெளிவாகவே தெரிகிறது.

இதெற்கல்லாம் அஞ்ச மாட்டோம்:

பாமகவைப் பொறுத்தவரையில் இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை சந்திப்பது புதிதல்ல. எத்தனையோ பழிவாங்கும் நடவடிக்கையை சந்தித்து தான், தடைகளை தாண்டித்தான் அரசியலில் வெற்றி கண்டு வந்திருக்கிறோம். எங்களுக்கு எதிராக எத்தனை பழிவாங்கும் நடவடிக்கைகள் வந்தாலும், அதை கண்டெல்லாம் துவண்டு விடப்போவதில்லை.

குருவை கொல்ல அமைச்சர் வீட்டில் சதி!!:

வன்னியர் சங்க தலைவர் குருவை கைது செய்வதோடு நின்று விடாமல், அவரை தீர்த்து கட்டவும் உயர்நிலை அளவில் சதி நடக்கிறது என்பது பற்றியும், அவ்வப்போது எங்களது கவனத்திற்கு சேதிகள் வந்து கொண்டிருக்கிறது.

மிக அண்மையில் கூட சென்னையில் ஒரு மூத்த அமைச்சரின் வீட்டில் இதற்காக ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டு இருக்கிறது என்றும் எங்களுக்கு தகவல் எட்டியிருக்கிறது. இந்த பின்னணியில் தான் இந்த விவகாரம் வெடித்து திடீரென்று வெடித்து கிளம்பியிருக்கிறது என்பதும் புரிகிறது.

அதிகாரம் கையில் இருந்தால்..:

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவரை இதற்காகவே உலவ விட்டிருக்கிறார்கள் என்று பல முறை முறையிட்டு இருக்கிறோம். குருவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று முதல்வரிடமே முறையிட்டு இருக்கிறோம். குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டவர்களிடமும் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது.

வன்மையாக கண்டிக்கிறேன்:

பாமக மக்கள் பிரச்சினைகளுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும், அரசியல்ரீதியாக எடுத்து வைக்கும் வாதங்களையும் கருத்துகளையும் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல், வன்முறை கட்சி என்ற முனை முறிந்து போன பழைய துருப்பிடித்த ஆயுதத்தைப் பயன்படுத்தி பாமக களங்கப்படுத்த முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அரசியலில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். வன்முறை பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். அதனை கண்டித்தும் வந்திருக்கிறேன்.

அதே நேரத்தில், ஆட்சியாளர்களும், பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அரசியலில் பழி வாங்கும் நடவடிக்கைகள் எந்த காலத்திலும் வெற்றி பெற்றதே இல்லை. ஒரு அரசியல் இயக்கத்தை, அது எழுப்பி வரும் அரசியல் பிரச்சினைகளை அரசியல்ரீதியாக சந்திக்க வேண்டுமே தவிர, அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக பழி வாங்கும் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விடக்கூடாது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X