For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த கூட்டணி ரயில் தடம்புரளாது..'என்ஜின்' கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கூட்டணி ரயிலை திமுக என்ஜின் இழுத்துச் செல்லும். வழியிலே எங்கும் தடம் பிறழாமல், கவிழாமல் இந்த என்ஜின் இந்த கூட்டணியை தொடர்ந்து வெற்றிகளிடம் கொண்டு சேர்க்கும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கத்தில் ரூ. 23 கோடி செலவில் தமிழக நெடுஞ்சாலைத்துறை, தெற்கு ரயில்வேயும் இணைந்து ரயில்வே மேம்பாலத்தை கட்டியுள்ளன.

இதை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

மத்திய அரசும், மாநில அரசும் ரயிலுக்கு இரண்டு தண்டவாளங்களை போல அமைந்து இணைந்து இருந்தால் தான், சேர வேண்டிய இடத்திலே பயணிகள் போய் சேர முடியும். குறிக்கோள் நிறைவேறும்.

இந்த கூட்டணி ரயில் மத்திய அரசையும், மாநில அரசையும் இணைக்கின்ற ரயில். அந்த கூட்டணி என்கிற அந்த ரயிலை திமுக என்கிற என்ஜின் இழுத்துச் செல்லும்.

நிச்சயமாக நான் என்ஜினாக இருந்து அவற்றை கொண்டு செல்வேன். வழியிலே எங்கும் தடம் பிறழாமல், கவிழாமல் இந்த என்ஜின் இந்த கூட்டணியை கொண்டு வந்து சேர்க்கும்.

ஒரு நாட்டினுடைய சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை தேவையாக அமைவது சாலை வசதிகள்தான். அதனால் தான் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நேரத்தில் எல்லாம் அதற்காக அதிக பணத்தைச் செலவிட்டு உழைப்பையும் செலவிட்டு, அதிலே நாங்கள் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என்பதை மார்தட்டி என்னால் சொல்லிக் கொள்ள முடியும்.

அண்ணா மறைந்து, 1969ல் நான் அந்த பொறுப்பையேற்ற பிறகு சாலை வசதிகளை முதலில் கவனிக்க வேண்டுமென்று திட்டமிட்டு அதற்கான பொறியாளர்களையெல்லாம் அழைத்துப் பேசி முதல் திட்டமாக கிராமப்புறச் சாலைகளை உருவாக்க வேண்டும், என்று எண்ணிப் பார்த்த போது, 1500 மக்கள் தொகையுள்ள கிராமங்களுக்கு இணைப்புச் சாலை வசதிகளை ஏற்படுத்துவது என திட்டமிட்டு சாலை வசதிகளைப் பெருக்கத் தொடங்கி இணைப்புச் சாலைகளை அமைத்தோம்.

இன்று தமிழகத்தில் குக்கிராமங்களிலே கூட தார்ச் சாலைகளைக் காணுகிறோம். 1996ம் ஆண்டில் கழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு தார்ச்சாலைகளை சிமெண்ட் சாலை வசதிகளையும் ஏற்படுத்தித் தந்து சாலைகள் அமைப்பதில் புதிய வரலாற்றைப் படைத்தது திமுக அரசு.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு சாலை வசதிகளைப் பெருக்கி முதலில் மண் சாலைகளாக இருந்தவற்றை கப்பிச்சாலைகளாக மாற்றி, கப்பிச்சாலைகளை அதற்கு பிறகு தார்ச்சாலைகளாக ஆக்கி, தார்ச்சாலைகளை சிமெண்ட் சாலைகளாக ஆக்கப்பட்டுள்ளன. சந்து பொந்துகளுக்குக் கூட சிமெண்ட் சாலைகள் என்ற அளவிற்கு பெருக்கி இருப்பது திமுக ஆட்சி என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழகம் சாலை வசதிகளில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

அதைப் போலவே பாலங்களை அமைப்பதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. மாநிலத்தில் 90 சதவிகித பாலங்களை கட்டிய பெருமை இந்த கழக அரசுக்கு தான் உண்டு.

பாலங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாத்திரமல்ல, ஆற்றின் குறுக்கே மாத்திரமல்ல, சாலைகளை இணைக்க மாத்திரமல்ல பாலங்கள்.

மனிதனுக்கு மனிதன் இடையே சில பாலங்கள் ஏற்பட வேண்டும். அந்த பாலங்கள் தான், சாதியற்ற, மதமற்ற, வெறுப்பற்ற, ஒருவரையொருவர் விரோதிக்காத நட்பு அடிப்படையிலே ஏற்படக் கூடிய பாலங்கள். அந்த பாலங்களையும் கட்டுகின்ற பணியிலே திமுக அரசு ஈடுபட்டிருக்கிறது.

நான் நடக்க முடியாமல் இப்போது கஷ்டப்படுகிறேன், காலில் வலி இருந்தாலுங்கூட பலமாகத் தான் நிற்கிறேன். அதனால் தான் இந்த விழாவிலே வந்து நான் கலந்து கொள்ள முடிகிறது. அந்த பலம் உள்ள வரை உங்களையெல்லாம் சந்தித்துக் கொண்டே இருப்பேன்.

அந்த பலமும் போனால் தான் பிறகு என்ன பலம் என்று கவலைப்படாமல், நான் உங்களிடமிருந்து, உங்களுக்காக ஆற்றுகின்ற பணியிலே இருந்து, ஓய்வு பெறுவேனே தவிர அதுவரையில் உங்களுக்காக நான் பாடுபட்டுக் கொண்டே இருப்பேன்.

மத்திய ரயில்வே இணைமைச்சர் ஆர்.வேலு இந்த விழாவிற்கு வந்து, சிறப்பித்திருக்கிறார், தனியாக நான் சொல்வதற்கு காரணம் அவருக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.

வேலு இந்த விழாவிலே வந்து நம்மையெல்லாம் மகிழ்வித்தமைக்காக நான் அவருக்கும், அவருடைய அரும் குணத்திற்கும், அமைதிக்கும் நன்றியையும், வணக்கத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.


முன்னதாக டிஜிபி அலுவலகத்தில் நடந்த விழாவில் பேசிய கருணாநிதி,

1989-90ம் ஆண்டு இங்கேயுள்ள ஐ.ஜி. ஆபீசை அடியோடு இடித்துவிட்டு, கடந்த ஆட்சியில் வேறு ஒரு கட்டிடத்தை அங்கே கட்டுவதென்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தான் முன்னாள் ஐ.ஜி.யாக இருந்த எப்.வி.அருள் பத்திரிகையிலே ஒரு அறிக்கை விடுத்தார்.

உலகத்தில் எங்கேயும், இப்படி கடற்கரையோரத்தில் காவல் துறைக்கென ஓர் இடம் கிடையாது, கடற்காற்று வீசுகின்ற- கடல் அலைகள் தாலாட்டுகின்ற எழில் குலுங்குகின்ற ஓரிடம் சென்னை மாநகரத்திலே தான் இருக்கிறது, அதை இடிப்பதாக வந்த தகவல் உள்ளபடியே எங்களையெல்லாம் வருந்தச் செய்கிறது என்று அருள் ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.

அப்போது தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நான், அதைப் படித்துப் பார்த்துவிட்டு சட்டசபையிலேயே சொன்னேன், அந்த இடம் இடிக்கப்பட மாட்டாது, அது புதுப்பிக்கப்பட்டு, ஏற்கனவே இருக்கிற ஐ.ஜி. ஆபீசாகவே அது இயங்கும் என்றேன்.

ஆனால், அதற்கு முன்பே அதை இடிப்பதற்கு ஒப்பந்தம் எல்லாம் பேசி முன் தொகையெல்லாம் கொடுத்துவிட்டவர்கள், நாங்கள் இடித்தே தீருவோம் என்று கடைப்பாறையை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.

நீதிமன்றத்திற்குச் சென்று அதைத் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, அய்யா இது பழமையான இடம், அது மாத்திரமல்ல, காவல் துறையிலே இந்தியாவிலே இருக்கின்ற மக்கள், இந்தக் கடற்கரைக்கு வரும்போதெல்லாம், அவர்களின் கவனத்தைக் கவருகின்ற இடம். இதை இடிக்கக் கூடாதென்று கேட்டு, நீதிமன்றம் நமது முறையீட்டையேற்றுக் கொண்டு அந்த ஒப்பந்தக்காரர் கடைசியாக உள்ளம் உருகி, நமக்கு விட்டுத் தந்து அதற்குப் பிறகு கொஞ்சம் செலவு செய்து இந்த அருமையான, பழமை வாய்ந்த ஐ.ஜி. அலுவலகத்தைப் புதுப்பித்திருக்கின்றோம்.

இதே சென்னையிலே தான் தோட்டக்கலைக்குச் சொந்தமான இடம் 320 கிரவுண்ட் இடத்தை தனிப்பட்ட ஒருவர் 30 ஆண்டு காலமாக அனுபவித்து வந்ததை, நாம் பெரிய விடுதலைப் போராட்டம் நடத்தி, நீதி வென்று, இப்போது அரசு அந்த இடத்தை மீட்டிருக்கிறது.

இதேபோல, மத்திய சிறைச்சாலை மாற்றப்பட்டு புழலுக்குச் சென்று, அந்த இடத்தில் அரசின் பொது மருத்துவமனைக்கு கிளை அமைக்கவிருக்கிறோம்.

இவைகள் மாத்திரமல்ல, நம்மை எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் சில சிறிய விஷயங்களுக்காகவாவது பாராட்டுவார்களா என்றால் இல்லை. நான் அதை விரும்பவும் இல்லை.

இதே சென்னை மாநகரத்தில் தான் நம்முடைய புதிய சட்டமன்ற புதிய வளாகம் மற்றும் தலைமைச் செயலகத்தை விரைவிலே கட்டி முடிக்கவிருக்கிறோம்.

வெளிநாடுகளில் இருப்பதைப் போல, பிரமாண்டமான ஒரு மாநில நூலகத்தை இங்கே அமைக்கவிருக்கிறோம்.

மெட்ரோ ரெயில் வரவிருக்கிறது. அடையாறு பூங்கா ரூ.100 கோடியில் அமைந்து கொண்டிருக்கிறது.

சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நேற்று மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கி அறிவித்திருப்பதை நீங்களும் அறிவீர்கள். அதற்கொன்றும் தடை வராது. தடை வந்தாலும் அது இடறி எறியப்படும் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X