For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனியில் ஜெ பொதுக் கூட்டம்-சன் லைவ் ரிலே

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
தேனி: நான் ஆட்சியில் இருந்தபோது ஜெயலலிதாவிடம் வம்புக்கு போக வேண்டாம் என்று மத்திய அரசே என்னைப் பார்த்து பயந்தது. நான் தான் உண்மையான திராவிட வீராங்கனை என ஜெயலலிதாவே கூறினார்.

தேனி கருவேல் நாயக்கன்பட்டியில் அண்ணா நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பொது வாழ்க்கையில் தூய்மையை கடை பிடித்தவர் அறிஞர் அண்ணா.

ஆனால் தமிழகத்தின் தற்போதைய நிலையை எண்ணிப்பார்க்கும் போது வேதனை அளிக்கிறது.

திருமுகங்களில் கலக்கம்:

உங்களது திருமுகங்களை காண்கிறேன். என்னை கண்டதும் உங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் உங்களது முகங்களில் ஏக்கம், விழிகளில் கலக்கம் தெரிகிறது.

ஏழை, எளிய நடுத்தர மக்கள் கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், தோட்டங்களில் உழைப்பவர்கள் என்று அனைவரும் எப்படி வாழப் போகிறோம் என்ற அச்சத்தில் கலக்கத்தில் உள்ளனர்.

என் ஆட்சியில் வறட்சியை நீக்க நடவடிக்கை எடுத்தேன். விலைவாசி உயராமல் கட்டுக்குள் வைத்திருந்தேன். நாட்டு மக்களைப் பற்றி கவலைப்பட்டால் இது நடக்கும். கருணாநிதி வீட்டு மக்களை பற்றிய கவலையில் இருப்பதால் விலைவாசி உயர்வு தெரியாதே?

அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் வானம் நோக்கி போகிறது. அதைத் தடுக்க மைனாரிட்டி திமுக அரசு தவறி விட்டது.

பொன்னி அரிசி.. பச்சரிசி...:

ஆண்டு எனது ஆட்சியில் பொன்னி பச்சரிசி ரூ.16க்கும், புழுங்கல் அரிசி ரூ.17க்கும், துவரம் பருப்பு ரூ.28க்கும், கடலைப்பருப்பு ரூ.27க்கும், மிளகாய் ரூ.22க்கும், நல்லெண்ணை ரூ.60க்கும், தேங்காய் எண்ணெய் ரூ.65க்கும்,

சூரியகாந்தி எண்ணை ரூ.45க்கும், கடலை எண்ணை ரூ.55க்கும், பாமாயில் ரூ.40 க்கும், சீரகம் ரூ.75க்கும், மிளகு ரூ.70க்கும், கோதுமை மாவு ரூ.17க்கும், மைதா மாவு ரூ.15 க்கும், புளி ரூ.42 க்கும், பூண்டு ரூ.38 க்கும் விற்கப்பட்டது.

ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் பொன்னி பச்சரிசி ரூ.30க்கும், புழுங்கல் அரிசி ரூ.29 க்கும், துவரம் பருப்பு ரூ.60க்கும், கடலைப்பருப்பு ரூ.58 க்கும், மிளகாய் ரூ.110 க்கும், நல்லெண்ணை ரூ.133 க்கும், தேங்காய் எண்ணெய் ரூ.105க்கும், சூரியகாந்தி எண்ணை ரூ.83க்கும், கடலை எண்ணை ரூ.84க்கும், பாமாயில் ரூ.48க்கும், சீரகம் ரூ.300க்கும், மிளகு ரூ.350க்கும், கோதுமை மாவு ரூ.31க்கும், மைதா மாவு ரூ.30க்கும், புளி ரூ.80க்கும், பூண்டு ரூ.120க்கும் விற்கப்படுகிறது.

சமையல் எரிவாயு விலை வானை முட்டுகிறது. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்த பிறகு 3 முறை சமையல் எரிவாயு விலை ஏற்றப்பட்டுள்ளது.

ரசம் கூட வைக்க முடியவில்லை:

ஆனால், ஒரு கிலோ ரேஷன் அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்ற சொல்லி இருக்கிறார்கள். வெறும் அரிசியை வைத்து என்ன செய்ய முடியும். சாதம் வைத்து ரசம் வைக்க முடியாத அளவுக்கு சீரகம், பூண்டு, மிளகு விலை உயர்ந்து விட்டது.

ஏழை, எளிய நடுத்தர வீடுகளில் ரசம் வைப்பதே இல்லை. குழம்பு வைக்க வேண்டும் என்றால் புளி, மிளகாய்த்தூள் விலை உயர்ந்து விட்டது. சாம்பார் வைக்க வேண்டுமானால் காய்கறி விலை வானத்தை முட்டுகிறது. துவரம் பருப்பு போட்டு கூட குழம்பு வைக்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து விட்டது. இதனால் மக்கள் குழம்பு, ரசம், சாம்பார் வைக்க முடியாத நிலை உள்ளது. வெறும் அரிசியை வைத்து என்ன செய்ய முடியும்?

வெறும் சோறாக்கி சாப்பிட வேண்டுமானாலும் கூட அடுப்புக்கரி, விறகின் விலை உயர்ந்து விட்டது.

மின்வெட்டு..மின்வெட்டு..மின்வெட்டு:

தமிழகத்தை மின்வெட்டுக்கு ஆளாக்கி கற்காலத்திற்கு கொண்டு சென்று விட்டனர். என் ஆட்சியில் முதல் மூன்று ஆண்டுகள் கடும் வறட்சி; இருப்பினும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டது. மின்வெட்டால் மாணவர்கள் படிக்க முடியவில்லை. மருத்துவமனைகளில் ஆபரேஷன்கள் நடக்கவில்லை. கம்ப்யூட்டர் சென்டர்கள் செயல்படவில்லை.

அதிமுக ஆட்சி காலத்தில் மின்பற்றாக்குறை இருப்பினும் மின்சாரம் தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்யப்பட்டது.

காற்றாலை மூலம் கூடுதல் மின் உற்பத்தி செய்ததில் எனது தலைமையிலான அரசு தேசிய விருதை பெற்றது. அதே நேரத்தில் காற்றாலை மின்சாரம் என்பது நிரந்தரம் இல்லை. காற்று வரும் காலத்தில் மட்டும் பயன்படுத்த முடியும். இருப்பினும் எனது 10 ஆண்டுகால ஆட்சி காலத்தில் 3,430.75 மெகாவாட் மின் திட்டங்கள் நிறுவப்பட்டன.

மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் அளவுக்கு தமிழகத்திற்கு வழங்கப்படும் மின் அளவு குறைக்கப்பட்டது. இந்த அளவினை எனது ஆட்சியில் நான் குறையாமல் பார்த்துக் கொண்டேன். எனது ஆட்சியில் குறைக்கப்பட்ட 1500 மெகாவாட் மின்சாரத்தினை போராடி தமிழ்நாட்டிற்கு பெற்றேன்.

எனக்கு பயந்த மத்திய அரசு:

சுயநலத்திற்காக மத்திய அரசை நேரில் சென்று மிரட்டும் கருணாநிதி, கூடுதல் மின்சாரம் பெற வலியுறுத்தாதது ஏன்?.

காரணம் ஜெயலலிதாவிடம் வம்புக்கு போக வேண்டாம் என்று மத்திய அரசுக்கு நம் மீது பயத்தினை ஏற்படுத்தினேன். ஜெயலலிதாவிடம் வம்புக்கு போகவேண்டாம் என்று மத்திய அரசும் மின்சாரத்தை வழங்கியது.

கருணாநிதி திராவிடரா?:

மத்திய அரசை கண்டு நடுங்கும் கருணாநிதி திராவிடரா? மத்திய அரசைக் கண்டு பயப்படாமல் அதனை அஞ்ச வைத்த நான் தான் உண்மையான திராவிட வீராங்கனை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தறிகெட்டுள்ளது.

இன்றைய தினம் டெல்லியில் ஒரு அரசு இருப்பதாகவே தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் நடந்தவைகள் நம்மை தலை குனிய செய்து விட்டது. இந்த மக்கள் விரோத ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

போலீஸ் துறை சட்டம் ஒழுங்கை பராமரிக்காமல், குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் கைது செய்யாமல் மியூசிக் சேர் விளையாடி கொண்டுள்ளது. கருணாநிதியின் குடும்பத்திலுள்ள 35 முதல்வர்களை சுற்றி சுற்றி ஓடி வருகிறது.

தமிழகத்தில் புதியதோர் அரசியல் மாற்றம் ஏற்படுத்த, தேனியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாம் சூளுரைப்போம். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும் என்றார்.

தேனி பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் பேச்சை சன் டிவி நேரடியாக ஒளிபரப்பியது.

முன்னதாக ஜெயலலிதா, விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தேனி வந்தார்.

இன்று ஆண்டிப்பட்டி செல்லும் ஜெயலலிதா அங்கு அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கு இலவச கம்ப்யூட்டர்களை வழங்குகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X