For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. பெருமைப்படுவது சரியல்ல- கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சி காலங்களில் அரசு அனுமதி வழங்கியது வெறும் 83 மெகாவாட் கூடுதல் மின் திறன் நிறுவுவதற்கு மட்டுமே. தனியாரும், மத்திய அரசும் செய்ததையெல்லாம் தனது ஆட்சியின் சாதனைகள் என்று ஜெயலலிதா பெருமைப்பட்டுக் கொள்வது சரியல்ல என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:

கேள்வி: ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 1991-96 மற்றும் 2001-06ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் 3,430 மெகாவாட் அளவுக்கு புதிதாக மின் உற்பத்தி நிறுவுதிறன் உருவாக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: அவர் கூறியிருப்பது உண்மையான தகவல் அல்ல. 1991-96 ஆட்சி காலத்தில் 40 மெகாவாட் திறன் கொண்ட நிலையங்களுக்கும் 2001-06 காலத்தில் 43 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு மட்டுமே ஜெயலலிதா அரசால் அனுமதி வழங்கப்பட்டது என்பது தான் உண்மை.

இந்தக் காலக் கட்டத்தில் 1200 மெகாவாட்டிற்கு மிகுதியான மின் உற்பத்தித்திறன் மத்திய அரசால் நிறுவப்பட்டதாகும். தனியார் மின் உற்பத்தியாளர்கள் 800 மெகாவாட் அளவிற்கு மின் நிலையங்களை அமைத்தனர்.

இந்த 800 மெகாவாட் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதல்ல. திமுக ஆட்சியில் 1996-2001ல் தொடங்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டதாகும்.

அவை, ஜி.எம்.ஆர். வாசவி 200 மெகாவாட், பிள்ளை பெருமாநல்லூர் 330 மெகா வாட், மேலூர் சமயநல்லூர் 106 மெகாவாட், தர்மபுரி சாமல்பட் 100 மெகாவாட், ராமநாதபுரம் மாவட்டம் வளத்தூர் 80 மெகாவாட்.

தனியாரும், மத்திய அரசும் செய்ததையெல்லாம் தனது ஆட்சியின் சாதனைகள் என்று ஜெயலலிதா பெருமைப்பட்டுக் கொள்வது சரியல்ல.

தமிழக மின் வாரியத்துறையில் சேர்க்கப்பட்ட 1200 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கூட 1984-85ம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிறகு நிலம் வாங்காமல் நிதியும் ஒதுக்காமல் விட்டு விட்ட வடசென்னை அனல்மின் திட்டம், 1989ல் நான் முதல்வரான பிறகு வி.ஜி. சந்தோஷம் சகோதரர்களை நேரில் அழைத்து, அதற்கான இடம் ஆர்ஜிதம் செய்வது குறித்துப் பேசினேன்.

உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் தொடுத்த வழக்கை அவர்களை விட்டே திரும்பப் பெறச் செய்தேன். பின்னர் அரசின் சார்பில் போதுமான நிதி ஒதுக்கப்பட்டு, அப்போது குடியரசு தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமனை அழைத்து வந்து அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட திட்டம்.

அதைப் போலவே தூத்துக்குடி அனல் மின் திட்டம் (நிலை 3) அன்றைய மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரோடு பேசி, அந்தத் துறைக்குச் சொந்தமான 500 ஏக்கர் நிலத்தைப் பெற்று திமுக ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டமாகும்.

எனவே பத்தாண்டு கால அதிமுக ஆட்சியிலே அவர்கள் அனுமதி வழங்கியது வெறும் 83 மெகாவாட் கூடுதல் மின் திறன் மட்டுமே நிறுவுவதற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தற்போது 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு எண்ணூரில் 600 மெகாவாட், வட சென்னையில் 1200 மெகாவாட், மேட்டூரில் 600 மெகாவாட், குந்தா நீர்த்தேக்கத்தில் 500 மெகாவாட், உடன்குடியில் 1600 மெகாவாட், நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனோடு சேர்ந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் என மொத்தம் 5500 மெகாவாட் கூடுதல் மின் திறன் உற்பத்தி செய்வதற்கான அனுமதி தமிழக அரசினால் வழங்கப்பட்டது.

இதில் வட சென்னையில் 1200 மெகாவாட், மேட்டூரில் 600 மெகாவாட் கூடுதல் மின் திறன் உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.

உடன்குடியில் 1600 மெகா வாட் மின் உற்பத்திக்கான நிலத்தை தமிழக அரசு பெல்' நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. அந்தத் திட்டமும் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்பட உள்ளது.

ஜெயலலிதா தனது அறிக்கையில் தமிழ்நாடு மின் வாரியம் தனது அனல் மின் நிலையங்களை சரிவர பராமரிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நான்கு அனல் மின் நிலையங்கள் உள்ளன.

இவற்றின் மொத்த நிறுவுத் திறன் 2970 மெகா வாட் ஆகும். 2007-08ம் ஆண்டில் இந்த அனல் மின் நிலையங்களின் மொத்த மின் உற்பத்தி 21,355 மில்லியன் யூனிட்டுகள்.

2005-06ல் ஜெயலலிதா ஆட்சியில் இந்த அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி 18,795 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தன. ஆகவே 2007-08ல் திமுக ஆட்சியில் மின் உற்பத்தி 13 சதவிகித அளவிற்கு உயர்ந்துள்ளதை ஆதார பூர்வமாகத் தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி: காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் அசோகன், டாக்டர் புஷ்பாஞ்சலி தம்பதியரின் மகன் ஹிதேந்திரன் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையிலே இருந்தபோது, அவனது பெற்றோர் ஹிதேந்திரன் உடலின் ஐந்து அவயங்களை தானமாக அளிக்க முன் வந்ததைப் பற்றி?

பதில்: உருக்கமுடன் பாராட்டப்பட வேண்டிய செய்தியாகும். மகனின் உடல் நிலையை அறிந்த அவனது பெற்றோர், அந்தத் துயரத்திற்கு மத்தியிலே இப்படிப்பட்ட ஒரு முடிவினை எடுத்து, அதனை சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

அப்பல்லோ டாக்டர்கள், அவர்களைப் பாராட்டியதோடு, உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏனென்றால் அகற்றப்படுவது கண்களாக இருந்தால் 14 நாட்கள் வரை பதப்படுத்தி வழங்கலாம். ஆனால் ஹிதேந்திராவின் இதயத்தை அகற்றப்பட்ட 30 நிமிடத்திற்குள் வேறு ஒருவருக்குப் பயன்படுத்தியாக வேண்டும்.

இல்லையென்றால் அது செயலிழந்து விடும். எனவே அவசர அவசரமாக இதயம் கேட்டு யாராவது விண்ணப்பத்திருக்கிறார்களா என்று விசாரித்தபோது, டாக்டர் செரியனின் மருத்துவமனையில் அபிராமி என்ற 9 வயது சிறுமிக்கு தேவை என்று விண்ணப்பித்திருந்தது தெரிய வந்தது.

உடனே டாக்டர் செரியனுக்கு தகவல் கூறப்பட்டது. பெங்களூரில் இருந்த அபிராமி சென்னைக்கு செரியன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அண்ணா சாலை அப்பல்லோ மருத்துவமனையிலே ஹிதேந்திராவின் இதயம் எடுக்கப்பட்டு, அது அண்ணா நகரில் உள்ள டாக்டர் செரியன் மருத்துவமனைக்கு 30 நிமிடத்திற்குள் கொண்டு சென்றாக வேண்டும். அதற்கான போக்குவரத்து பாதுகாப்பு வசதிகளை சென்னை மாநகர காவல் துறையினரால் செய்யப்பட்டது.

சரியாக 11 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டு, டாக்டர் செரியன் தலைமையில் டாக்டர்கள் இதயத்தை மாற்றி பொருத்தி வைத்து வெற்றி கண்டுள்ளார்கள். அபிராமிக்கு பொருத்தப்பட்ட இதயம் தற்போது நன்கு செயல்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஹிதேந்திராவின் கண்கள், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளும் தானத்திற்காக காத்திருக்கின்றன. டாக்டர் அசோகன் தனது மகன் சாகவில்லை என்றும் ஆறு பேருக்கு உயிர் கொடுத்து வாழ்கிறான் என்றும் உருக்கமாக கூறியுள்ளார்.

இத்தகைய மகத்தான தியாக மனப்பான்மை வாய்ந்த டாக்டர் தம்பதியரின் செயலையும், இந்த இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு துணை நின்ற மருத்துவர்களையும், ஒத்துழைப்பு நல்கிய காவல் துறையினரையும் நான் மனமாரப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X