டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளராக மல்ஹோத்ரா அறிவிப்பு
டெல்லி: டெல்லிக்கான பாஜக முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வி.கே.மல்ஹோத்ரா அறிவிக்கப்பட்டுள்ளார்.
விரைவில் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு இப்போதே தயாராகி வரும் பாஜக, சட்டசபைத் தேர்தலுக்கும் ஆயத்தமாகி வருகிறது.
முதல் கட்டமாக மாநில முதல்வர் பதவிகளுக்கான வேட்பாளர்களை அது அறிவித்து வருகிறது. டெல்லிக்கான முதல்வர் வேட்பாளர் பெயரை தற்போது பாஜக அறிவித்துள்ளது.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மல்ஹோத்ரா, செய்தித் தொடர்பாளராகவும், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
கட்சியின் பிரதமர் வேட்பாளராக ஏற்கனவே எல்.கே.அத்வானி அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.