சர்வதேச நெருக்கடி: பிரிட்டிஷ் வங்கியும் வீழ்ந்தது!

இதோ சிக்கலில் சிக்கி விரைவில் கைமாறப்போகும் இன்னொரு வங்கியின் கதை.
வாஷிங்டன் மியூச்சுவல் வங்கியை விடிவதற்குள் அதன் இயக்குனர், தலைவர், வாடிக்கையாளர்களுக்குக் கூடத் தெரியாமல் வேறு வங்கியிடம் ஒப்படைத்து அதிரடி செய்தது அமெரிக்க அரசு.
இப்போது அமெரிக்காவைப் போலவே பிரிட்டனின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பும் தடுமாறத் துவங்கிவிட்டது.
இங்கும் வங்கித் துறையில் நெருக்கடிகள் ஆரம்பித்துள்ளன. முதல் கட்டமாக பிராட்ஃபோர்டு அண்ட் பிரிக்லி வங்கி மூடுவிழாவுக்குத் தயாராகி வருகிறது.
இந்த வங்கியை வேறு வங்கிக்கு கைமாற்றி விடாமல், அரசுடைமை ஆக்குகிறது பிரிட்டிஷ் அரசு. அதாவது இந்த வங்கியின் சேமிப்புகள், அசையும் அசையா சொத்துக்கள், வைப்புகள் போன்றவற்றை தனித்தனியாக விற்று இழப்பை சரி செய்யப்போகிறது பிரிட்டிஷ் அரசு.
பிரான்ஃபோர்டு அண்ட் பிரிக்லி வங்கி, சொத்துக்களின் மீது கடன் வழங்கும் பணியை பிரதானமாகச் செய்து கொண்டிருந்தது. 200 கிளைகளும், 44 மில்லியன் டாலர் வைப்புத் தொகையும் கொண்ட இந்த வங்கி, பிரிட்டனின் ஒன்பதாவது பெரிய கடன் அளிப்பு வங்கியாகும்.
மிகப்பெரிய நிறுவனங்களின் சொத்துக்களை பிணையமாகக் கொண்டு இந்த வங்கி கடன் வழங்கி வந்தது. ஆனால் அமெரிக்காவின் வீட்டு வசதிக் கடன் அமைப்பில் ஏற்பட்ட கடும் நெருக்கடி பிரிட்டனிலும் எதிரொலிக்க, பிரான்ஃபோர்டு அண்ட் பிரிக்லி வங்கியின் கடன் வழங்கும் திறனும் குறைந்தது. வராக்கடன் அதிகரித்துவிட்டது.
பல்வேறு கடன்களாக 41 பில்லியன் பவுண்ட்கள் (கிட்டத்தட்ட டாலரை விட இருமடங்கு அதிக மதிப்பு மிக்க கரன்ஸி பவுண்ட்) இந்த வங்கிக்கு நிலுவையில் உள்ளன.
இது அந்த வங்கியின் வைப்புத் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிராட்டபோர்டு மற்றும் பிரிக்லியின் நிர்வாகம் மற்றும் சொத்துக்களை வேறு தனியார் வங்கிகளை ஏற்கும்படி பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் பிராட்ஃபோர்டு அண்ட் பிரிக்லிக்கு உள்ள கடன் அளவைப் பார்த்து மிரண்டுபோய் எந்த வங்கியும் இதற்கு முன் வரவில்லை.
இந்நிலையில் அரசே இந்த வங்கியை ஏற்றுக்கொண்டு, அதன் கிளைகளையும் டெபாசிட்டுகளையும் தேவைப்படுவோருக்கு விற்க முடிவு செய்துள்ளது.
அதேபோல சொத்துக்களையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. பொதுமக்களின் அனைத்து வைப்புத் தொகையையும் பாதுகாப்பான வேறு வங்கிக்கு மாற்றித் தரப்படும் என்றும் பிரிட்டனின் கருவூலத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
முன் வந்தது சண்டேன்டர்:
இந் நிலையில் இந்த வங்கியின் 200 கிளைகளையும் டெபாசிட்டுகளையும் 400 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்க ஸ்பெயின் நாட்டு வங்கியான சண்டேன்டர் (Santander) முன் வந்துள்ளது.
தற்போது அரசுடைமையாக்கத்துக்கான வழிமுறைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த வங்கியின் இயக்குநர்களுடன் பேசி வருகின்றனர். இந்த வார இறுதிக்குள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுவிடும் எனத் தெரிகிறது.
பிராட்ஃபோர்டு அண்ட் பிரிக்லியின் இந்த வீழ்ச்சி பிரிட்டிஷ் தொழில் முனைவோருக்கும், வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.