'செல்வகணபதி எபெக்ட்'-எம்ஜிஆர் சிலை திறக்கும் ஜெ
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செல்வகணபதியும் அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்து வருவதால் அதை 'கெளண்டர்' செய்யும் வகையில், சேலம் மாவட்டம் ராசிபுரத்தில் அதிமுகவின் 37வது ஆண்டு விழா பொதுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலலிதா.
மேலும் ராசிபுரத்தில் அங்கு நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருக்கும் எம்ஜிஆர் சிலையையும் ஒருவழியாக அவர் திறந்து வைக்கிறார்.
அடுத்த மாதம் 17ம் தேதி அதிமுகவின் 37வது ஆண்டு விழாவையொட்டி ராசிபுரத்தில் நடைபெறும் விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்டு, அங்கு நீண்ட காலமாக திறக்காமல் இருக்கும் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து, அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்றதால் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள சரிவை ஈடுகட்டவே இந்த ஆண்டு கட்சியின் ஆண்டு விழாவை ராசிபுரத்தில் நடத்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும், பின்னரும் பலமுறை அவர் ராசிபுரத்துக்கு வந்து எம்ஜிஆர் சிலையை திறக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாயின.
இதையடுத்து ஜெயலலிதாவை வரவேற்க பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடைசி நேரத்தில் அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந் நிலையில் ஜெயலலிதா இப்போது ராசிபுரத்திலேயே கட்சியின் ஆண்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்ட நிர்வாகிகளுக்கு 'கல்தா':
இதற்கிடையே ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும்
நாகப்பட்டினம் நகர 8-வது வார்டு அதிமுக செயலாளர் சுல்தான், ராமநாதபுரம் ஒன்றிய அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் நூர்முகமது, ராமநாதபுரம் ஒன்றியத்தை சேர்ந்த கஜினி முகமது ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
தலைவரான செயலாளர்.. செயலாளரான தலைவர்:
அதே போல தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் பொறுப்பில் இருக்கும் சண்முகநாதன், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொறுப்பில் இருக்கும் செல்லத்துரை ஆகியோரும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பொறுப்பில் செல்லத்துரையும், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொறுப்பில் சண்முகநாதனும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.