புலிகள் போன்ற 3வது சக்தியே காரணம்: இலங்கை துணைத் தூதரகம்
சென்னை: கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது இலங்கை கடற்படை அல்ல. விடுதலைப் புலிகள் போன்ற 3வது சக்தியே காரணம் என்று இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மீனவர் முருகன் கொலை தொடர்பாக இலங்கை துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 28ம் தேதி கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஊடகங்களில் வெளியான செய்தி எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு சம்பந்தமான உண்மையான தகவல்களைப் பெறுவதற்காக இந்த சம்பவம் பற்றிய தகவல்களை உடனடியாக இலங்கை கடற்படை பூரண விசாரணைக்குப் பின்னர் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.
இலங்கை கடற்படையினர் இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதியில், தமது ரோந்துப் படகுகள் எவையும் அவ்வேளையில் நிலை கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கிலும், இலங்கை கடற்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், விடுதலைப் புலிகள் போன்ற மூன்றாவது சக்தி ஒன்றின் செயல்பாடாக இது அமைவதற்கும் சாத்தியம் உள்ளது என்பதை நிராகரிப்பதற்கில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.