வாக்கோவியாவை வாங்குகிறது சிட்டி குரூப்!

இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கா அரசின் டெபாசிட் இன்ஸ்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் செய்துள்ளது.
வாக்கோவியாவின் பங்குகளுக்கான பேரம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்தது. சிட்டி வங்கியுடன் மேலும் சில போட்டி வங்கிகளும் இந்தப் பேச்சு வார்த்தையில் பங்கேற்றன.
பெடரல் டெபாசிட் இன்ஸ்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் முன்னிலையில் இப்பேச்சுகள் நடந்தன. நேற்று இரவு வரை தொடர்ந்த இப்பேச்சுக்களின் முடிவில், சிட்டி வங்கிக்கு வாக்கோவியாவின் பங்குகளை முழுமையாக மாற்ற ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால் வாக்கோவியா பங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்க சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு அந்நாட்டின் வங்கித் துறை இம்முறை செயலிழந்து வருகிறது. கிட்டத்தட்ட உலகப் பெருமந்தத்தின் போதுகூட இந்த மாதிரி வரிசையாக வங்கிகள் மூடப்படவில்லை என பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்துக்குள் பியர் ஸ்டெர்ன், லேஹ்மன் பிரதர்ஸ், மெர்ரில் லின்ஜ், வாஷிங்டன் மியூச்சுவல், இப்போது வாக்கோவியா என வரிசையாக பல வங்கிகள் நிதி நெருக்கடி தாளாமல் மூடுவிழா கண்டுள்ளன. இன்னும் சில அதற்கான தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்துமே அமெரிக்கப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய சக்திகளாகத் திகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.