For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத் தமிழர்களைக் காக்க இந்த அரசை இழக்கவும் தயார்! - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: மத்திய அரசின் எச்சரிக்கைகள் இலங்கையில் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில் இந்த அரசு எங்களுக்குத் தேவையா என்கிற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் நிலையும் மத்திய அரசுக்கு வேண்டுகோளும்' எனும் தலைப்பில் தி.மு.க. சார்பில் சென்னை மயிலை மாங்கொல்லையில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச் செயலாளரும், நிதி அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கை பிரச்சினை குறித்து பேசவேண்டிய, செயல்பட வேண்டிய உறுதி எடுக்க வேண்டிய, ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையை எந்த கோணங்களில் அணுகப்போகிறோம், அணுக இருக்கிறோம் என்ற நிலைகளை கடந்த 2 நாட்களாக தலைமை கழகத்தின் சார்பில் நானும், பொதுச்செயலாளரும், கழக முன்னோடிகளும் அறிவாலயத்தில் அமர்ந்து சிந்தித்து அதனடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுதான் இந்தப் பொதுக் கூட்டம்.

இந்த கூட்டத்திற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டு, உங்களை எல்லாம் சந்திப்பதற்கு முன்பு எதற்கும் மத்திய அரசோடு ஒரு வார்த்தை பேசிவிட்டு, நம்முடைய முடிவுகளை எடுக்கலாம் என்று கருதி மத்திய அரசுக்கு நம்முடைய நிலையை விளக்கி நாம் தமிழகத்திலே எத்தகைய தாங்கொணா துயரத்திற்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை எடுத்துச்சொல்லி, அவர்களுக்கு விளக்கம் அளித்து, 'இதற்கு தக்கதோர் வழிகாண வேண்டும். தமிழர்களை இலங்கைத் தீவிலே காப்பாற்றியாக வேண்டும்' என்ற அபயக்குரலை இங்கே எழுப்புவதற்காகக் கூடியிருக்கிறோம்.

இலங்கைக்கு உதவுவதை ஏற்க முடியாது!

இன்றைக்கு போராட்டத்தை அறிவிக்கப்போகிறோம் என்று யாரும் கருத வேண்டாம். நமது ஆசைகள் நிராசைகளாகுமேயானால், நமது எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தை தருமேயானால், அதைப்பற்றி நாம் ஆலோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை தவிர்த்திட நான் விரும்பவில்லை.

ஏனென்றால் இருப்பது ஒரு உயிர். அது போகப்போவது ஒருமுறை. அது நல்ல காரியத்திற்காக போகட்டுமே என்கின்ற பழமொழி இன்றைக்கெல்லாம் கேட்டுக்கேட்டு பழக்கமான ஒரு மொழி. அது கேட்டுக்கேட்டு பழக்கமாக இருந்தது மட்டும் போதாது.

செயல்பட்ட மொழியாகவும் மாறிடும் ஒருநிலையை உருவாக்குவதற்கு இலங்கை அரசும், இலங்கை அரசுக்கு ஏதோ ஒரு வகையில் தங்களையும் அறியாமல் ஏமாற்றப்பட்டு இந்தியப் பேரரசு துணையாக மாறிவருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அறிவிப்பதற்காகத்தான் இந்த கூட்டம்.

1956-ல் தீர்மானம்!

1956ம் ஆண்டிலேயே இலங்கை பிரச்சினைக்கான குரல் தமிழகத்தில் எழுந்தது. அந்த பிரச்சினைக்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தையும், அன்று சிதம்பரத்தில் 29.1.56-ல் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நான் தான் முன்மொழிந்தேன். கழகத்தின் மூத்த தலைவர்களுல் ஒருவரான பொன்னம்பலனார் அதை வழிமொழிந்தார்.

எனவே நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான்கள் சில பேர் இந்த பிரச்சினையை எழுப்பிக்கொண்டு கூச்சலிடுகிறார்கள் என்று யாரும் சொல்ல முடியாது.

என்றைக்கு இலங்கையில் இந்த பிரச்சினை உருவாயிற்றோ, அன்றைக்கே போர் முழக்கம் ஆரம்பமாயிற்று.

தமிழகத்திலே வாழ்கின்ற தாய் தமிழகத்து தமிழர்கள் அனைவரும் இலங்கை வாழ் தமிழர்களின் இன்னலைப் போக்க நமது எல்லா ஆதரவையும் அளிக்கத்தான் இங்கே கூடியிருக்கிறோம் என்பதை மறக்கக்கூடாது. இதை ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானமாக ஆக்கி நேற்றைய தினம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், இந்திய அரசை நடத்துகின்ற தலைவர்களுக்கும், சோனியா காந்திக்கும் அனுப்பி வைத்தோம்.

அந்த தீர்மானத்திற்கு பலன் இல்லாமல் போகவில்லை. இன்று காலை 10 மணி அளவில் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவை அழைத்த பிரதமர் மன்மோகன்சிங் அவரிடத்தில் நிலவரங்களைக் கேட்டறிந்து, எனது கடிதத்திற்கும் வேண்டுகோளுக்கும் உடனடியாக பதில் அளிக்கிறேன் என்று சொல்லி, தொலைபேசி மூலமாக என்னையும் தொடர்பு கொண்டு பேசினார். இருக்கும் விவரங்களை எல்லாம் நான் விவரித்து சொன்னேன்.

தினமும் செத்துக் கொண்டிருக்கிறோம்...

எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இந்தியாவின் தலையீடு இருப்பதாகவே அவர்கள் எண்ணவில்லை. அதை அலட்சியப்படுத்திவிட்டு நடக்கிறார்கள். தினம் தினம் எங்கள் செவிகளிலே விழுகின்ற செய்திகள் எங்களை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. எங்களால் தமிழகத்தில் தொடர்ந்து இனி வாழ முடியுமா? என்று எங்களுக்கு தெரியவில்லை. நாள்தோறும் செத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை நான் மன்மோகன் சிங்கிடம் சொன்னேன்.

அதற்கு அவர்கள் கவலைப்பட வேண்டாம். நான் உறுதியாக சொல்கிறேன், என்னை நம்புங்கள் என்று இந்திய பிரதமர் எனக்கு வாக்களித்தார். வாக்களித்த உடனே தான் நான் அவரிடம் எங்களுடைய கோரிக்கைகள் நீங்கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னேன்.

கோரிக்கைகள்:

என்ன கோரிக்கைகள் என்று கேட்டார். ஒவ்வொரு கோரிக்கையாக நான் படித்துக்காட்டினேன். அதன் விவரத்தை உங்களுக்கும் சொல்கிறேன்....

புதுடெல்லியிலே உள்ள இலங்கை தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து நிராயுதபாணியாக உள்ள இலங்கைத் தோழர்களைக் கொல்வது குறித்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.

இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும், இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

இலங்கை அரசு அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கிட வேண்டும்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் எத்தகைய துன்பத்திற்கும் இனி ஆளாகவே கூடாது. இவைகளையெல்லாம் எடுத்துக் கூறியபோது, மிகுந்த அக்கறையுடனும், கவலையுடனும் தழுதழுத்த குரலில் பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக்கொண்டு நான் உடனடியாக கவனிக்கிறேன், என்னை நம்புங்கள் என்று அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருந்தன, எனக்கு நம்பிக்கை ஊட்டியவைகளாகவும் இருந்தன.

எச்சரிக்கிறேன்!

ஒருவேளை அவராலே நிறைவேற்றப்பட முடியாமல் போகுமேயானால் நான் அவரையும் துணைக்கு அழைக்கிறேன், நம்முடைய இனத் தமிழர்களை ஒழித்துத்தான் தீருவோம் என்ற இலங்கை கச்சைக் கட்டிக்கொண்டு இந்த போரிலே ஈடுபடுமேயானால் தமிழர்கள் கைகட்டிக் கொண்டு இருக்க முடியாது.

அப்படி ஒரு நிலை ஏற்படும் போது இந்திய அரசு எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக பிரதமருக்கு எடுத்துக் கூறுகிறேன்.

ஆனால் அவர்கள் என்னிடத்திலே உறுதியளித்தது மாத்திரமல்ல, உடனடியாக இந்திய பாதுகாப்பு ஆலோசகரை அழைத்து அவர் மூலமாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரை வரச்சொல்லி அவரை எச்சரித்து இப்படி தமிழகத்தில் இருந்து கண்டனக் குரல் வந்திருக்கிறது. தமிழர்கள் தங்கள் கவலையை தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் எங்கள் துயரத்தை அறிந்து ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையை இந்திய அரசு அவர்களுக்கு செய்துள்ளது என்ற செய்தி மகிழ்ச்சியானது.

தமிழன் எங்கே செத்தாலும் தமிழன்தான்!

இது மீறப்பட்டால் அதற்கு பிறகு நாங்கள் இந்த அரசு (தி.மு.க. அரசு) எங்களுக்கு தேவையா? என்கின்ற அந்த கேள்விக்கு விடை கண்டாக வேண்டும் என்பதை பவ்யமாக, அடக்கமாக, அமைதியாக, அதே நேரத்திலே நான் தமிழன், தமிழ்நாட்டு மக்களை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு தமிழன், தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லாம் காவலாக நியமிக்கப்பட்ட ஒரு காவலன்.

அந்த தமிழன் இங்கே செத்தால் என்ன? இலங்கையிலே செத்தால் என்ன? எங்கே செத்தாலும் அவன் தமிழன் தமிழன்தான். எனவே அந்த தமிழனை காப்பாற்ற நாங்கள் நடத்துகின்ற போராட்டத்தில் இந்திய அரசே எங்களை கைவிட்டு விடாதீர்கள் என்று கேட்கத்தான் இந்த கூட்டம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X