கங்குலியின் மகளை கடத்தப் போவதாக மிரட்டல்
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலியின் மகள் சானாவை ரூ. 4 கோடி கேட்டு கடத்தப் போவதாக இரண்டு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையில்இறங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நாளை ஆடவுள்ள கங்குலி, நேற்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் திடுக்கிடும் தகவல் ஒன்றைக் கூறினார்.
தனது மகள் சானாவைக் கடத்தப் போவதாக தனது குடும்பத்திற்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளதாக அப்போது அவர் சுருக்கமாக ெதரிவித்தார். இதுகுறித்த மேல் விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.
கங்குலி - டோனா தம்பதியின் ஒரே மகள் சானா. 7வது வயதில் அடியெடுத்து வைக்கவிருக்கும் சானா, அடுத்த மாதம் 3ம் தேதி பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார்.
இந்த நிலையில் கங்குலி வீட்டுக்கு இரண்டு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. கடந்த மாதம் முதல் கடிதம் வந்தது. அப்போது கங்குலி குடும்பத்தினர் வெளிநாடு போயிருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனால் கங்குலி குடும்பத்தினர் கலக்கமடைந்துள்ளனர்.
இதுகுறித்து கொல்கத்தா உளவுப் பிரிவு போலீஸாரிடம் கங்குலி புகார் தெரிவித்தார். அவர்கள் இந்த கடிதங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இரு கடிதங்களும் டோனா பெயருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரூ. 4 கோடி பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சானாவைக் கடத்தி விடுவோம் என அதில் மிரட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.