3 நாட்களாக 150 அடி குழியில் தவிக்கும் சிறுவன் - மீட்பு முயற்சி தீவிரம்
ஆக்ரா: 150 அடி ஆழமுடைய போர்வெல் குழியில் விழுந்த இரண்டு வயது சோனு என்கிற சிறுவனை பத்திரமாக மீட்க கடந்த 3 நாட்களாக தீவிர முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
ஆக்ரா அருகே உள்ள ஷாம்ஷாபாத் என்ற இடத்தைச் சேர்ந்த சிறுவன் சோனு, வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, 150 அடி ஆழ ஆழ்குழாய் குழியில் விழுந்து விட்டான்.
இதையடுத்து உடனடியாக ராணுவம் வரவழைக்கப்பட்டது. சிறுவன் விழுந்துள்ள குழிக்கு அருகே மிகப் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. சிறுவனுக்கு மேலிருந்தபடி ஆக்சிஜன் அனுப்பி வருகின்றனர். டாக்டர்கள் குழு அங்கேயே முகாமிட்டு சிறுவனின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். மேலிருந்தபடியே உணவும் அனுப்பப்பட்டு வருகிறது.
ஆனால் வியாழக்கிழமை மாலைக்கு மேல் சிறுவனிடமிருந்து எந்த குரலும் வரவில்லை. அவனுடைய தாயார் பலமுறை அழைத்தும் கூட அவனிடமிருந்து பதில் இல்லை. இதனால் மீட்புக் குழுவினர் கவலை அடைந்துள்ளனர்.
இதுவரை 60 அடி வரைக்கு மட்டுமே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பள்ளம் தோண்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 3 நாட்களாகியும் மீட்பு முயற்சி இன்னும் முழுமை அடையாததால், மீட்புக் குழுவினர் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி பூல்விந்தர் சிங் கூறுகையில், சிறுவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில் எந்த கருத்தையும் தெரிவிப்பது கடினம். தொடர்ந்து பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது என்றார்.
சோனுவிடமிருந்து பதில் ஏதும் வராத நிலையில் மீட்புக் குழுவினர் நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டுமொத்த கிராமும் சோனு பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது.