அனைத்துக் கட்சிக் கூட்டம்: தலைவர்களுக்கு கருணாநிதி கடிதம்

இலங்கைத் தமிழர்களை ராணுவம் சுற்றிச் சூழ்ந்து தாக்கி வருகிறது. பல லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகியுள்ளனர். விடுதலைப் புலிகளை தாக்குகிறோம் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை வருகிற 14ம் தேதியன்று கூட்டியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார்.
அதில், இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழகத்து அரசியல் இயக்கங்களும், அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியதன் காரணமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்து விரைவுபடுத்திடவும், நிலையான அமைதி அங்கே உருவாகிட தக்க முயற்சிகளை மேற்கொள்ளவும்,
அங்கே இனப் படுகொலையும், போரும் அல்லாத சூழ்நிலையை உருவாக்கவும், மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ள தமிழக அரசின் சார்பில் அக்டோபர் 14ம் தேதியன்று மாலை 4.30 மணிக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், தாங்கள் இந்த அழைப்பை ஏற்று தவறாது அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.