காதல்..போலி ஐடி..மாணவி கடத்தல்..வாலிபர் கைது
சென்னை: சிஐடி போலீஸ் என்று கூறி கல்லூரி மாணவியை கடத்தி லாட்ஜில் அடைத்து சித்ரவதை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். மாணவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் பாத்திமா (20). இவர் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பாத்திமா திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அவரது தந்தை போலீஸில் புகார் செய்தார்.
பூக்கடை துணை கமிஷனர் கருப்பசாமி, உதவி கமிஷனர் பாலச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸார் பாத்திமாவை தேடும் பணியில் இறங்கினார்.
பாத்திமாவின் செல்போன் சிக்னலை வைத்து அவர் கோவளத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கோவளத்தில் உள்ள லாட்ஜுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு லாட்ஜ் அறையில் பாத்திமா அடைத்து வைக்கப்பட்டிருந்த பாத்திமாவை போலீசார் மீட்டனர்.
அந்த அறையில் இருந்த வாலிபரையும் கைது செய்தனர்.
வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் மன்சூர் ஷா (26) என்றும் வாணியம்பாடியை அடுத்த முகிலம்பூரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
ராயப்பேட்டையில் வசித்து வரும் தனது அக்கா வீட்டுக்கு மன்சூர் அடிக்கடி வந்து செல்வாராம். ரயில்வே சிஐடி போலீஸ்(!) என்று போலி அடையாள அட்டையையும், அரசு வக்கீல் என்று மற்றொரு போலி அடையாள அட்டையையும் தயாரித்துள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பாத்திமாவை பார்த்துள்ளார். முதல் பார்வையிலேயே பாத்திமாவை ஒருதலையாக காதலிக்க தொடங்கினார்.
பாத்திமா வேறு ஒரு வாலிபருடன் பேசிக் கொண்டிருந்தை பார்த்துள்ளார். இதையடுத்து சிஐடி போலீஸ் போலி ஐடியை காட்டி இருவரையும் மிரட்டி அந்த வாலிபரை விரட்டியுள்ளார்.
விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி பாத்திமாவையும், அவரது தோழியையும் ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். பாரிமுனை அருகே தோழியை இறக்கிவிட்டு பாத்திமாவை கோவளத்துக்கு அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
தனது காதலையும், திருமணத்துக்கு சம்மதிக்கும்படியும் கூறி மிரட்டியுள்ளார். அதற்குள் போலீசார் அவரை பிடித்துவிட்டனர்.