For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய சொல்வாரா கருணாநிதி?- ஜெ

By Staff
Google Oneindia Tamil News

ராசிபுரம்: இலங்கைத் தமிழர்கள் மீது கருணாநிதிக்கு உண்மையான அக்கறை இருக்குமேயானால் தனது கட்சியின் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யச் சொல்வாரா?, முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா?, மாநில ஆட்சியை தூக்கி எறிவாரா? என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவின் 37வது ஆண்டு விழாவையொட்டி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா நடந்தது.

புதிய பஸ் நிலையம் அருகே 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலையை ஜெயலலிதா திறந்து வைத்தார்.

பின்னர் ராசிபுரம்-நாமக்கல் ரோட்டில் முனியப்பன் கோவில் அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்காக திமுக மத்திய அமைச்சர்கள், எம்பிக்களை ராஜினாமா செய்ய சொல்லியிருக்கிறார் கருணாநிதி.

அமைச்சர்கள் ராஜினாமா செய்தாலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஆறு மாத காலம்வரை அமைச்சர் பதவியில் நீடிக்கலாம். தற்போதுள்ள மக்களவை முடிவதற்கே இன்னும் ஆறு மாத காலம்தான் இருக்கிறது.

எனவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, ராஜினாமா செய்து விட்டாலும் திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் மந்திரி பதவிகளில் தொடரலாம்.

இலங்கைத் தமிழர்கள் மீது கருணாநிதிக்கு உண்மையான அக்கறை இருக்குமேயானால் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்வாரா?.

தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா?. மாநில ஆட்சியை வேண்டாம் என்று தூக்கி எறிவாரா?

2006ம் ஆண்டு மே மாதத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்றுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையோடு ஒப்பிட்டு பார்த்தால் ஒவ்வொரு பொருட்களின் விலையும் 100 சதவீதம் முதல் 300 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசியின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய், 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய பொட்டலம் போன்ற கவர்ச்சி திட்டங்களை அறிவித்திருக்கிறார் கருணாநிதி.

நியாய விலைக் கடைகளில் முறைகேடுகள் செய்து அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணை ஆகியவற்றை வெளிச்சந்தையில் விற்று பல லட்சக்கணக்கான ரூபாய்களை சுருட்டிக் கொண்டிருப்பவர்கள் மீது கருணாநிதி நடவடிக்கை எடுப்பாரா?

காந்தி பிறந்த நாள் முதல், கருணாநிதியால் அறிவிக்கப்பட்டுள்ள 50 ரூபாய்க்கு 10 மளிகை பொருட்கள் பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் கிடைக்கவில்லை. இதையும் திமுகவினர் கடத்துவதாக மக்கள் சந்தேகப்படுகின்றனர்.

தமிழகத்தில் மின்சார உற்பத்தியும் குறைந்து விட்டது. மின்சார வாரியமும் திவாலாகும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

இப்படி கடுமையான மின்சாரப் பற்றாக்குறை, நிலவுகின்ற இந்த தருணத்தில் ஒரு குதிரை சக்தி, மும்முனை இணைப்பு பெற்று, குறுந்தொழில் செய்ய விரும்புவோர், சாலைகளில் அமைக்கப்படும் மின்கம்பம், கம்பி, டிரான்ஸ்பார்மர் அமைப்பது உட்பட அனைத்து செலவையும், ஏற்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் புதிதாக ஆறரை மணி நேர மின்வெட்டை அறிமுகப்படுத்திய திமுக அரசு மின்தடை நேரத்தில் தொழிற்சாலைகள் ஜெனரேட்டர்களை உபயோகப்படுத்தவேண்டும் என்றும், ஜெனரேட்டர்களுக்கான டீசலை எஸ்ஸார் என்ற தனியார் நிறுவனத்திடமிருந்து லிட்டருக்கு 50 ரூபாய் என்ற விலையில், வாங்கிக் கொள்ளவேண்டும் என்றும் அறிவித்திருக்கிறது.

இது போன்ற நிலைமை நீடித்தால், தமிழ்நாட்டில் யாரும் எந்தத் தொழிலையும் செய்ய முன் வரமாட்டார்கள். அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவுப் பஞ்சம் ஏற்படும்.

மின்சார உற்பத்தி அதிகரிக்கிறதோ இல்லையோ மின்சார வெட்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. இது போன்ற உத்தரவுகளை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். இல்லையெனில், ஜெனரேட்டர்களை உபயோகப்படுத்தினால் தொழிற்சாலைக்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசே ஏற்க வேண்டும்.

திமுக ஆட்சியில் நிலவும், கடுமையான மின்வெட்டு காரணமாக, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி, தொழில் உற்பத்தி என அனைத்தும் முடங்கிப் போய் விட்டன.

விரைவிலேயே நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. அந்தத் தேர்தலில் நீங்கள் இந்த மத்திய, மாநில அரசுகள் இரண்டையும் தூக்கி எறிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X